பாராலிம்பிக் வீரர் மாரியப்பனின் தம்பி: காதல் திருமண விவகாரம்; போலீஸார் சமரசம்

பாராலிம்பிக் வீரர் மாரியப்பனின் தம்பி: காதல் திருமண விவகாரம்; போலீஸார் சமரசம்
Updated on
1 min read

பாராலிம்பிக் வீரர் மாரியப்பனின் தம்பி காதல் திருமணம் தொடர்பாக போலீஸார் இருவீட்டரையும் அழைத்து பேசி சமரசம் செய்தனர்.

காடையாம்பட்டி அடுத்த பெரியவடக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இவரது தம்பி கோபி (24). இவர் மீது நேற்று முன்தினம் காலை தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பெரியவடக்கம்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் புகார் தெரிவித்தார்.

புகாரில் ‘எனது மூத்த மகள் பவித்ரா (20) சேலத்தில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 27-ம் தேதி காலை வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

விசாரித்ததில், எங்கள் ஊரைச் சேர்ந்த கோபி எனது மகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. எனவே, அவரிடம் இருந்து எங்கள் மகளை மீட்டு கொடுக்க வேண்டும்,’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை கோபி, பவித்ராவுடன் வந்தார். தாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோபி தெரிவித்தார்.

இதையடுத்து, இருவரையும் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அங்கு இருவரின் பெற்றோரையும் போலீஸார் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும், பவித்ரா மேஜர் என்பதால் அவரின் சுய விருப்பத்தின்படி கோபியை திருமணம் செய்து கொண்டதால், கோபியுடன் அவரை அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in