Published : 30 Jan 2022 06:05 AM
Last Updated : 30 Jan 2022 06:05 AM

வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் மனுக்களை சரிபார்க்க வார்டுக்கு ஒரு மேஜை அமைக்க வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு அரசியல் கட்சியினர் கோரிக்கை

சென்னை மாநகராட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி.படம்: ம.பிரபு

சென்னை

சென்னையில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் வார்டுக்கு ஒரு மேஜை அமைத்து, வேட்புமனுக்களை சரிபார்க்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சித் தேர்தலில், நடத்தை விதிகளைக் கடைப்பிடிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பெரும்பாலான அரசியல் கட்சிகள், "இது சட்டப்பேரவைத் தேர்தல் இல்லை. ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் 5 வார்டுகளுக்கான வேட்புமனுக்களைப் பெற வேண்டும். ஒவ்வொரு வார்டுக்கும்தலா 10 பேராவது விண்ணப்பிப்பார்கள். தற்போது உள்ள நடைமுறை தொடர்ந்தால், சிக்கல் ஏற்படும். விண்ணப்பிப்பதற்கான நாட்களும் குறைவாக உள்ளன. அதனால் ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனி மேஜைகளை வெளியில் அமைத்து, வேட்புமனுக்களை சரிபார்த்து, அதன் பின்னர் அதை தாக்கல் செய்ய வழிவகை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

அதை மாநகராட்சி ஆணையர் ஏற்றுக்கொண்டு, அதற்கான வழிவகை செய்யப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:

வேட்புமனு தாக்கல் செய்யும் அறையில், வேட்பாளர் அல்லது அவரது சார்பாளர் இவர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். மனு தாக்கல் செய்ய வரும்போது 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும். கட்சியோ அல்லது வேட்பாளரோ உரிய அலுவலரிடமிருந்து அனுமதி பெறாமல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது.

3 பேருக்கு மட்டுமே அனுமதி

ஒரு வேட்பாளர் தன்னுடன் அதிகபட்சமாக 3 ஆதரவாளர்களுடன் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி குறிப்பிடாமல், தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரம் உள்ளிட்டவற்றை அச்சடிக்கக் கூடாது. பொது கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் தேர்தல் குறித்த சுவரொட்டி ஒட்டுவது மற்றும் விளம்பரங்கள் எழுதுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் பொது கட்டிடங்கள், தனியார் இடங்களில் ஏற்கெனவே வரையப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மாநகராட்சிப் பணியாளர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை அரசு சுவர்களில் இருந்த3,688 விளம்பரங்கள், தனியார் சுவர்களில் இருந்த 2,528 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி பணியில் 27 ஆயிரத்து 812 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு 24 மையங்களில் வரும் 31-ம் தேதி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்கத் தவறுவோர், நியாயமான காரணத்தை தெரிவிக்காவிட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆணையர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் முனைவர் ஜெ.விஜயாராணி, விஷு மஹாஜன், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x