Published : 30 Jan 2022 06:09 AM
Last Updated : 30 Jan 2022 06:09 AM

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரத்யேக இணையதளத்தை உருவாக்க வேண்டும்: மாநகர காவல் ஆணையருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை

சென்னை ஆழ்வார்ப்பேட்டை சேமியர்ஸ் சாலை, செயின்ட் மேரீஸ் சாலை ஆகியவற்றை ஒரு வழிப் பாதையாக்கியது தொடர்பாகவும், தடையின்றி இடதுபுறம் செல்வது தொடர்பாகவும், அந்த சாலைகளில் போக்குவரத்தை எளிதாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பி, ஆர்.நடராஜன் என்பவர் கடந்த ஜன. 6-ம் தேதி தகவல் உரிமை சட்டப்படி மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், அதற்கு முறையாக பதில் வராததால், மாநில தகவல் ஆணையத்தில் நடராஜன் முறையீடு செய்தார்.

இந்த முறையீட்டை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘தகவல் பெறும் உரிமை சட்டத்தில் ஒவ்வொரு பொது தகவல் அதிகாரியும், மக்களுக்கான தகவல்களை அறிவிப்புப் பலகை, பொது அறிவிப்பு, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் மூலமாகத் தர வேண்டியது கட்டாயமாகும்.

ஆனால், இந்த வழக்கில் பொது தகவல் அதிகாரி உரிய பதில் அளிக்கவில்லை. சென்னை மாநகர காவல் ஆணையரகத்துக்கு எந்த பிரத்யேக இணையதளமும் இல்லை.

மகாராஷ்டிரா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களுக்கு தனியாக இணையதளம் இருந்தாலும், மும்பை காவல் துறைக்கும், கொல்கத்தா காவல் துறைக்கும் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த இணையதளங்களில் அனைத்து காவல் நிலையங்கள், அதன் அதிகாரிகள், அந்த காவல் நிலையங்களின் இ-மெயில் முகவரி, வழக்கு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாகவும், எளிதாகவும் உள்ளன.

சென்னையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே, சென்னை போக்குவரத்து நெரிசலை பொதுமக்கள் அவ்வப்போது தெரிந்து கொள்ளும் வகையில், மாநகர காவல் ஆணையரகத்துக்கு என பிரத்யேக இணைதயளத்தை உருவாக்க வேண்டும்.

அதில், சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்கள், அவற்றின் எல்லைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டும். அதேபோல, போக்குவரத்து வழிமுறைகள், நெரிசல்கள் தொடர்பான தகவல்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்து, போதுமான தகவல்களை வழங்க வேண்டும்.

குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 471 பேருந்து வழித்தடங்களிலும் ஃப்ரீ லெப்ட் எனப்படும் தடையின்றி இடதுபுறம் செல்லக்கூடிய வழிகள் எவை என்பது குறித்தும் தெளிவாக குறிப்பிட வேண்டும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைக்க முடியும். இந்த உத்தரவை அமல்படுத்த சென்னை மாநகர காவல் ஆணையரகம் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x