உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  கட்டப்பட்டுள்ள கூடுதல் வழக்கறிஞர்கள் அறைகள், நீதிபதிகள் அடுக்கு மாடி குடியிருப்பு, இணைப்பு பாலத்தை திறந்து வைத்தார் தலைமை நீதிபதி (பொறுப்பு ) முனீஸ்வர்நாத் பண்டாரி. உடன் நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, எஸ்.வைத்தியநாதன்,  எம்.சுந்தர், பி.புகழேந்தி, அனிதா சுமந்த்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வழக்கறிஞர்கள் அறைகள், நீதிபதிகள் அடுக்கு மாடி குடியிருப்பு, இணைப்பு பாலத்தை திறந்து வைத்தார் தலைமை நீதிபதி (பொறுப்பு ) முனீஸ்வர்நாத் பண்டாரி. உடன் நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, எஸ்.வைத்தியநாதன், எம்.சுந்தர், பி.புகழேந்தி, அனிதா சுமந்த்.

கரோனா காலத்தில் அதிக வழக்குகளை விசாரித்து தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்த உயர் நீதிமன்ற கிளை: தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பெருமிதம்

Published on

கரோனா காலத்தில் அதிக வழக்கு களை விசாரித்த நீதிமன்றங்களில் தேசிய அளவில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை 2-ம் இடம் பிடித்துள்ளது என சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசினார்.

உயர் நீதிமன்றக் கிளையில் ரூ.22.48 கோடியில் 84 கூடுதல் வழக்கறிஞர்கள் அறை, நீதிமன்ற நிர்வாகக் கட்டிட இணைப்புப் பாலம், நீதிபதிகள் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை சென்னை உயர் நீதிமன்றப் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்று திறந்து வைத்தார். ரூ.4.27 கோடி மதிப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

இதில் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பேசியதாவது:

கரோனா காலத்தில் கடந்த 2 ஆண்டுகளில் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது. நீதிபதிகள் தங்கள் பணியை விரைந்து முடித்து நீதி வழங்க வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பு அவசியம்.

உயர் நீதிமன்றம் மட்டுமின்றி கீழமை நீதிமன்றங்களிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. கரோனா பரவல் காரணமாக அனைத்து நீதிமன்றங்களிலும் காணொலி முறையில் விசாரணை நடைபெறுகிறது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு நேரடி விசாரணை நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

முன்னதாக உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி புஷ்பா சத்யநாராயணா வரவேற்றார். நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், எம்.சுந்தர், பி.புகழேந்தி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரகதிரவன் ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் நீதிபதிகள், உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கவுரி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், அரசு பிளீடர் திலக்குமார் மற்றும் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நீதிபதி அனிதா சுமந்த் நன்றி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in