Published : 30 Jan 2022 08:15 AM
Last Updated : 30 Jan 2022 08:15 AM

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் 45-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகள்.

தூத்துக்குடி

ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணியில் 45-க்கும் மேற்பட்ட முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில், 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த அக்.10-ம் தேதி தொடங்கி, மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 3 இடங்களில் 28-க்கும் மேற்பட்ட குழிகள்தோண்டப்பட்டன. இப்பணியில்தற்போது வரை 45 முதுமக்கள்தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இங்கு மக்கள் வாழ்ந்த வாழ்விடப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது 3,500 ஆண்டுகளுக்கு முன் இங்கு மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக, இங்கு சுண்ணாம்பு தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தளம் மிகவும் வலிமையாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநரும், திருச்சி மண்டல இயக்குநருமான அருண்ராஜ் கூறும்போது, “ஆதிச்சநல்லூரில் தோண்டப்பட்ட குழிகளை இறுதி செய்து, எந்த குழியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கலாம் என முடிவு செய்து, அதன் மீது கண்ணாடித் தளம் அமைக்கப்படும். மேலும், பிரம்மாண்டமாக செட் அமைத்து, இந்த குழிகளை பாதுகாப்பதற்காக டெண்டர் விடும் பணிகள் தொடங்கி உள்ளன. ஒவ்வொரு ஆய்வாளர்களை அழைத்து, அவர்கள் துறை மூலமாக ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.

ஆதிச்சநல்லூரில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x