

தமாகாவில் இருந்து விலகிய பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி யில் தமாகா இணைந்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து அக் கட்சியின் துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பொதுச் செய லாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், தமாகாவில் இருந்து விலகினர்.
இதையடுத்து, அவர்கள் காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் முன்னிலையில் தமாகா நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் காங்கிரஸில் இணைந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ராஜேஸ்வரன், வன்னியர் சங்க பிரமுகர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் காங்கிரஸில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசும்போது, ‘‘பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மீண்டும் தாய் வீட் டுக்கு வந்துள்ளனர். உங்கள் நம்பிக்கை வீண் போகாது. இந்த பேரியக்கம் உங்களை எப்போதும்போலவே அரவணைக்கும்’’ என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, ‘‘தமிழகத்திலும், தேசிய அளவிலும் காங்கிரஸ் நீண்ட நெடிய பயணம் செல்ல வேண்டியுள்ளது. அந்தப் பயணத்துக்கு பலவிதமான திறமைகள் கொண்டவர்கள் ஏராளமாக தேவை. பீட்டர் அல்போன்ஸ் போன்ற சிறந்த பேச்சாளர்கள் இந்த நெடிய பயணம் எனும் உன்னதமான லட்சியத்தை அடைய உதவியாக இருப்பார்கள்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.