Published : 29 Jan 2022 04:20 PM
Last Updated : 29 Jan 2022 04:20 PM

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலக ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சென்னை: மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலக ஊழியர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொணடனர்.

மகாத்மா காந்தியடிகளின் 75-வது நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் நினைவாக தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவதுடன், மகாத்மா காந்தியின் நினைவாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்கப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியின்போது, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியைப் படிக்க தலைமைச் செயலக ஊழியர்கள் அதனை திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

முன்னதாக, தமிழக அரசுத் தரப்பில் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: "உத்தமர் காந்தியடிகளின் 75-ஆவது நினைவு நாளானது தேச அளவில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, உயிர்த் தியாகம் செய்த உத்தம வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரித் திங்கள் 30-ஆம் நாள் “தியாகிகள் தினம்” ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சாதியப் பாகுபாடும், தீண்டாமையும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவை என்றுரைத்திட்ட அண்ணலின் நினைவாகத் தீண்டாமை உறுதிமொழியும் மேற்கொள்ளப்படுகிறது.இதனை முன்னிட்டு, சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு நாளை (30.1.2022) காலை 10.00 மணியளவில், தமிழக அரசின் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்கள்.

அண்ணல் என்றும், தேசப்பிதா என்றும், மகாத்மா என்றும் நம் அனைவராலும் அன்புடன் எப்போதும் அழைத்துப் போற்றப்படும் உத்தமர், காந்தியடிகள் ஆவார். தன்னலந்துறந்து, நாட்டுமக்களின் நலன் ஒன்றையே பெரிதெனக் கொண்டு, தலைசிறந்த தனித்துவமிக்கத் தனது தியாக வாழ்க்கையினையே தனிப்பெரும் பாடமாக உலகினிற்குத் தந்திட்ட தியாக சீலர் அண்ணல் காந்தியடிகள் என்றால் அது மிகையில்லை."வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.“என்கிற வள்ளுவப் பெருந்தகையின் இலக்கணத்திற்கு இலக்கியமாக வாழ்ந்தவர் அண்ணல் காந்தியடிகள். வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை, மடியின்மை, அன்புடைமை, அருளுடைமை ஆகிய அனைத்து நற்பண்புகளின் உறைவிடமாக விளங்கியதன் பயனாக, வங்கக்கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் அண்ணலை ‘மகாத்மா’ என மாமகுடம் சூட்டி மகிழ்ந்தார்.

‘என் வாழ்க்கையே எனது செய்தி’ என்பார் அண்ணல் காந்தியடிகள். “ஆங்கிலேயர் கையிலே இருக்கும் துப்பாக்கியைக் கண்டு அஞ்சாதே! அறத்தின் வழி நின்று, எதிர்த்து நில்! ஆங்கிலப்படை வீரர் தாக்கினால், தாங்கிக் கொள்! எதிர்த்துத் தாக்காதே! கைது செய்தால் அகமகிழ்வோடு செல்! மரண தண்டனை விதித்தால் முகமலர்ச்சியோடு தூக்குக் கயிற்றின் முன் நில்!” என அமைதி வழியில் அறப்போர் புரிந்தவர். ஆயுதங்களால் போர் செய்து பழகிய ஆங்கிலேயர்களுக்கு அண்ணலின் அறவழியாம் அகிம்சை எனும் விந்தை வழி கண்டு அதிர்ந்தே போயினர். உலக வரலாற்றில் ஆயுதம் தவிர்த்து, அறவழியில் விடுதலைக்கு வித்திட்ட நம் தேசப்பிதா காந்தியடிகள் உலகுக்கே முன்னோடியாகவும், முதன்மையானத் தலைவராகவும் போற்றிப் புகழப்பட்டார்.

ஒட்டுமொத்த உலகையே உளமார நேசித்தவர் அண்ணல் காந்தியடிகள். இந்திய தேசத்தின் தந்தையாக வழிகாட்டியாக திகழ்ந்தாலும், தன் நெஞ்சத்தில் தமிழ்நாட்டுக்கு என தனி இடத்தை கொண்டிருந்தார். தமிழ் மொழியைப் பெரிதும் நேசித்ததோடு, தனக்கு தமிழ் கற்பிக்க ஆசிரமத்தில் ஒரு தமிழ் ஆசிரியரை பணியமர்த்தியவர். தென்னாப்பிரிக்காவில் அண்ணல் காந்தியடிகள் நடத்திய அகிம்சை வழியிலான உரிமைப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் முதல் வரிசையில் நிற்கும் தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகியோரும் தமிழர்களே.

உத்தமர் காந்தியடிகள் இந்தியாவில் நிலவிவந்த மிகக் கொடுமையான தீண்டாமை மற்றும் சாதீயப் பாகுபாடுகளை கண்டு மிகுந்த வேதனையுற்றதோடு பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம் கொண்டுள்ள இந்திய மக்களிடையே குறிப்பாக, தாழ்த்தப்பட்ட மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆட்படுவதைக் கண்டு இதனை முற்றிலுமாக அகற்றிட வேண்டும் என்கின்ற முனைப்பிலே அரிஜன இயக்கத்தைத் தொடங்கினார். மனிதனிடையே உயர்வு தாழ்வு என்ற வேற்றுமையெல்லாம் தீண்டாமையினால் வந்த விளைவே. இத்தகைய தீண்டாமை ஒழிந்தால் உயர்வு தாழ்வு என்கிற வேற்றுமைகள் களையப்படுவதோடு, சாதிய முறைகளும் ஒழிந்து, மனித இனம் பரிசுத்தமாகும் என்று சூளுரைத்தார்.

அண்ணல் காந்தியடிகள் தனது வாழ்க்கையில் பல்வேறு சீரிய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பின்பற்றியதோடு மத நல்லிணக்கத்தினைப் போற்றுவதிலும், தீண்டாமையை வேரறுப்பதிலும் திடமான உறுதி பூண்டிருந்தார். எண்ணற்ற அருமை பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட அண்ணலின் புகழினைப் போற்றிடும் வகையில், மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டுத் தங்கள் உயிரைத் தந்திட்ட விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு மணிமண்டபங்கள், சிலைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில், அரசின் சார்பில் சிறந்த முறையில் விழாக்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், நாட்டிற்காக அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் அனைவரையும் போற்றிப் பெருமை சேர்க்கின்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரத் தினம் மற்றும் குடியரசு தின விழாக்களின்போது, அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தியாகத் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். மேலும், நம் நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட உத்தமர் காந்தியடிகள், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோர்க்கு பெருமை சேர்க்கின்ற வகையிலும், இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுச் செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மக்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலத்தவரும் கண்டு வியந்து பாராட்டிய, ‘விடுதலைப் போரில் தமிழகம்’ எனும் தலைப்பில், நாட்டின் விடுதலைக்கு அரும்பாடுபட்டு, அறியப்படாத தமிழகத் தலைவர்களைக் காட்சிப்படுத்திய அரியதொரு கண்காட்சியினை, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 01.11.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததும், 26.01.2022 அன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் விடுதலைக்கு வித்திட்ட தமிழகத் தலைவர்களின் உருவங்கள் தாங்கிய அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், அந்த அலங்கார ஊர்திகளை மாநிலம் முழுதும் முக்கிய நகரங்களில் உள்ள மக்கள் கண்டு களித்திடும் வகையில், கொடியசைத்துத் தொடங்கி வைத்ததும் இதுவரையில் தமிழகம் கண்டிராத ஒன்று என்றால் அது மிகையில்லை. ஆண்டுகள் 75 மறைந்தாலும், அண்ணலின் அறவழியும்; அகிம்சை வழிக் கோட்பாடுகளும் இன்றல்ல; என்றென்றும் மங்கிடாமல் போற்றிப் புகழப்படும் என்பதில் ஐயமில்லை" எனத் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x