

காரைக்கால் : காரைக்காலில் சனிக்கிழமை தோறும் பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சிறப்பு ஏற்பாட்டை புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி போக்குவரத்துத் துறையில் அலுவலக நாட்களில் அனைத்துத் தரப்பினரும் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், கூடுதல் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. ஆனால், பணிக்கு செல்லும் பெண்கள், குடும்பத் தலைவிகளில் பெரும்பாலானோர் அலுவலக நாட்களில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு சிரமத்திற்குள்ளாகிறார்கள் என்பதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கடந்த 2021-2022 ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தார். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் புதுச்சேரி பிராந்தியத்தில் இந்த வசதி தொடங்கப்பட்டது.
இதையடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் இன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. காரைக்காலில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் சந்திர பிரியங்கா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து, பெண்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் யாரும் வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதன்மூலம் சனிக்கிழமைகளில் பெண்கள் மட்டும் ஓட்டுநர் உரிமம் பெறுவது தொடர்பான நடைமுறைகளை இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக வாகனங்களை இயக்கிக் காட்டும் தேர்வை மேற்கொள்ள முடியும். இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, வட்டாரப் போக்குவரத்து அதிகாரி கலியபெருமாள், போக்குவரத்து ஆய்வாளர்கள் சுந்தரேசன், கல்விமாறன் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.