

சென்னை: மாநகராட்சி பொறியாளரை தாக்கியது தொடர்பாக திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் மீது காவல்துறையில் சென்னை மாநகராட்சி இன்று புகார் அளித்துள்ளது.
மறைந்த முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரரான கே.பி.சங்கர், திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராகவும், திருவொற்றியூர் திமுக மேற்கு பகுதி செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்தநிலையில், திருவொற்றியூரில் சாலை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி, மாநகராட்சி பொறியாளரை எம்.எல்.ஏ.சங்கர் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்கப்பட்ட மாநகராட்சி உதவிப் பொறியாளர் சார்பிலும் ஒரு புகார் அளிக்கப்படவுள்ளது.
முன்னதாக, திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருப்பவர் கே.பி.சங்கர். திருவொற்றியூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஆகியோருடன் சில நாட்களுக்கு முன்பு கே.பி.சங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மாநகராட்சி பொறியாளரை கே.பி.சங்கர் தாக்கியதாகவும் தெரிகிறது. இத்தகவல் வெளியான நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘திருவொற்றியூர் எம்எல்ஏ, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்த கே.பி.சங்கர், மாநகராட்சி பொறியாளரை தான் தாக்கவில்லை என்றும், தனது உதவியாளருக்கும், மாநகராட்சி பொறியாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது உதவியாளர்கள் அவரைதாக்கியதாகவும், தான் அந்த இடத்திலேயே இல்லை என்றும் விளக்கம் அளித்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.