Published : 29 Jan 2022 06:14 AM
Last Updated : 29 Jan 2022 06:14 AM

செயலி மூலம் மின் கணக்கீடு செய்யும் முறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த மின்வாரியம் திட்டம்

சென்னை: செயலி மூலம் மின் கட்டணத்தை கணக்கீடு செய்யும் புதிய முறையை வரும் பிப்.1-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்த மின் வாரியம் திட்ட மிட்டுள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் வாரியம் கணக்கெடுத்து வருகிறது. வீடுகளுக்குகணக்கெடுக்கச் செல்லும் ஊழியர், அதுகுறித்த விவரங்களை பதிவுசெய்யும் கருவியை எடுத்துச் செல்கிறார். பின்னர் அவர் அலுவலகம் வந்து, அந்த விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்வார். பின்னர், நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு மின் கட்டண விவரம் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும்.

இந்நிலையில், சில ஊழியர்கள் குறித்த காலத்தில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கச் செல்லாதது, மின் பயன்பாட்டைக் குறைத்துகணக்கெடுப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் மின் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்காக மின் வாரியம் புதிய செயலியை வடிவமைத்துள்ளது. இந்த செயலி,கணக்கெடுக்கச் செல்லும் ஊழியரின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்படும். அதனுடன், மீட்டரையும், செல்போனையும் இணைக்கும் கேபிளும் வழங்கப்படும். கணக்கீட்டாளர் தனது செல்போனில் கேபிளை இணைத்து, மீட்டரில் உள்ள ஆப்டிகல் போர்ட் பகுதியுடன் இணைத்து, மின் பயன்பாட்டைக் கணக்கெடுத்து, செல்போன் செயலில் பதிவு செய்ய வேண்டும்.

செயலியில் பதிவு செய்த உடனே அதற்கான மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, சர்வருக்கும், தொடர்புடைய நுகர்வோரின் செல்போனுக்கும் அனுப்பப்படும்.

இந்த முறையில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுப்பதில் தவறுகள் நடைபெறுவது தடுக்கப்படுவதுடன், கணக்கெடுக்கும் தேதி,நேரம் போன்றவை பதிவாவதால், குறித்த காலத்துக்குள் கணக்கெடுப்பது உறுதி செய்யப்படும்.

முதல்கட்டமாக மின் வாரிய ஊழியர்கள் 27 பேருக்கு இந்த செயலி வழங்கப்படும். பிப்.1 முதல்சோதனை முயற்சியாக இந்தசெயலி மூலம் மின் கணக்கெடுப்பு பணிகளை சென்னை, வேலூரில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், செயலியின் சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்து, அதுகுறித்த தகவல்களை தலைமையகத்துக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மின் வாரியதகவல் தொழில்நுட்பத் துறை தலைமைப் பொறியாளர் என்.பாலாஜி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x