

சென்னை: மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்து கலந்தாய்வுக்கு வந்த ஓய்வுபெற்ற ஆசிரியரின் விண் ணப்பத்தை ஏற்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதுதொடர்பாக, தருமபுரி மாவட்டம் பாப்ராபட்டியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம்(61) கூறியதாவது: “பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவே ஓய்வுக்குப் பின் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று விண்ணப்பித்தேன். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலிலும் இடம்பெற்றேன். கலந்தாய்வு அறையில், ‘மருத்துவம் படிக்க 10 மற்றும் 12-ம் வகுப்பு தகுதியாக உள்ளது. நீங்கள் பியூசி படித்திருப்பதால் உங்களுடைய விண்ணப்பத்தை ஏற்க முடியாது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு, நான் மருத்துவம் படிக்க வரவில்லை. நான் என்னுடைய இடத்தை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுக்கத்தான் வந்திருக்கிறேன் என்று தெரிவித்தேன்’’ என்றார்.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, “நீட் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. சட்டப்படி 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று இடத்தை தேர்வு செய்து மருத்துவம் படிக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பியூசி படித்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது” என்றனர்.