Published : 29 Jan 2022 09:59 AM
Last Updated : 29 Jan 2022 09:59 AM

7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் முதல் நாள் கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்கள் 541 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம்

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு கலந்தாய்வில், முதல் 10 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன். உடன் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர் ப.வசந்தாமணி உள்ளிட்ட அதிகாரிகள். படம்: பு.க.பிரவீன்

சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர்சேர்க்கை கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேர் கல்லூரிகளில் சேர ஆணையை பெற்றனர்.

இந்நிலையில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 2 நாள் கலந்தாய்வு நேற்றுதொடங்கியது. கலந்தாய்வில்பங்கேற்குமாறு 762 பேருக்குஅழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில், 739 பேர் பங்கேற்றனர். 541பேருக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணை வழங்கப்பட்டது. 3 பிடிஎஸ் இடங்கள் மட்டும் காலியாகவுள்ளன. காத்திருப்போர் பட்டியலில் 198 பேர் வைக்கப்பட்டுள்ளனர்.

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வழங்கினார். மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் வசந்தாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒடஒதுக்கீட்டின்படி 437 எம்பிபிஎஸ் இடங்கள், 107 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. நாளையும் (இன்று) அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். 30-ம் தேதி (நாளை) முதல் பிப்.7-ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறவுள்ளது. பிப். 8-ம்தேதி முதல் 3 நாட்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். இறுதி ஒதுக்கீடு ஆணை 11 அல்லது 12-ம் தேதிஅறிவிக்கப்படும். ஒருமுறை இடங்களை தேர்வு செய்தால் நேரடியாக மாற்றம் செய்ய முடியாது. அதேநேரத்தில் இரண்டாவது கலந்தாய்வின் போது, விரும்பும் கல்லூரிகளில் தங்கள் இட ஒதுக்கீட்டில் இடங்கள் காலியாக இருக்கும்பட்சத்தில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் இடம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் படித்து 7.5சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவஇடங்கள் பெறும் மாணவர்களுக்கு படிக்கும் வரை கல்வி, உணவு, உடை, தங்கும் விடுதி போன்ற அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒரே பள்ளியில் படித்த மாணவிகள்

திருநெல்வேலி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இசக்கியம்மாள், யாமினி, பிரியாஆகியோர் திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்களை பெற்றனர். அதேபோல், மதுரை ஈ.வெ.ரா மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் படித்த ராதிகாவுக்கு மதுரையிலும், நான்சிக்கு திருநெல்வேலியிலும் இடம் கிடைத்தது.

தரவரிசைப் பட்டியலில் 2-ம் இடம் பிடித்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி மகன் பிரகாஷ் ராஜுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அந்த மாணவர் கூறியதாவது:

நாங்கள் இருப்பது குக்கிராமம் என்பதால், ஏதாவது மருத்துவ உதவிக்கு 32 கி.மீ கடந்துதிருவண்ணாமலைக்கு செல்லும் நிலை உள்ளது.அதனால், மருத்துவராகி எங்கள் கிராமத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது சிறுவயது கனவாக இருந்து வந்தது. நீட் தேர்வு கொஞ்சம் கடினமாகத்தான்இருந்தது. நீட் தேர்வுக்கு தமிழில் பாடப்புத்தகங்கள் சரியாக கிடைக்காததால், தேர்வுக்கு தயாராவதில் சிரமம் ஏற்பட்டது. ஆன்லைன் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் தேர்வுக்கு படித்தேன்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில்இரண்டாவதாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலிடத்திலும் வந்தேன். எனக்கு சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி)படிக்க இடம் கிடைத்துள்ளது. அரசுபள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடுதான் எனது மருத்துவ கனவு நனவாக முக்கிய காரணம்.

எனது குடும்பத்தினர், ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கனவை நனவாக்க நீட் தேர்வுக்கான பாடப்புத்தகங்கள், முந்தைய ஆண்டுகளின் கேள்வித்தாள்களை தமிழ் மொழியில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x