Published : 29 Jan 2022 08:48 AM
Last Updated : 29 Jan 2022 08:48 AM

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது: கூட்டணி, வார்டு பங்கீடு பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியதை அடுத்து சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.படம்: எஸ்.குரு பிரசாத்

சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கூட்டணி கட்சிகளுடன் வார்டு பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு செய்யும் பணிகளில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் பிப்.19-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை பிப்.22-ம் தேதி நடக்க உள்ளது.

இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் வெளிப்படைத் தன்மையுடன் நடக்க வேண்டும் என்பதற்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மனு தாக்கல் செய்யப்படும் பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

திமுக, அதிமுக கூட்டணிகளில் வார்டு பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. இதில், இன்னும் முடிவு ஏற்படவில்லை. அதனால், முக்கிய அரசியல் கட்சியினர் யாரும் நேற்றுவேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சுயேச்சைகள் சிலரே மனு தாக்கல் செய்தனர். சிலர் வேட்புமனு விண்ணப்பங்கள் வாங்கவும்,ஆலோசனை பெறுவதற்காகவும் தேர்தல் அலுவலர் அலுவலகத்துக்கு வந்து சென்றனர்.

முதல்நாளில் வேட்புமனு தாக்கல் மந்தமாகவே இருந்தது. சனிக்கிழமையான இன்றும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மனு தாக்கல் செய்ய பிப்.4-ம் தேதி கடைசி நாளாகும். வரும் 31-ம் தேதி அமாவாசை என்பதால் அன்று அதிக அளவில் வேட்புமனுக்கள் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, கூட்டணி கட்சிகளுக்கு வார்டு பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், அந்தந்த மாவட்ட திமுக செயலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து, வார்டு பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறும்போது, ‘‘வார்டுகள் பங்கீடு தொடர்பாக மாவட்ட அளவில் திமுக செயலாளர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் எங்கெல்லாம் போட்டியிட விரும்புகிறார்களோ, அந்த இடங்கள் குறித்து திமுக மாவட்டச் செயலர்கள் மூலமாக பரிசீலிப்பதாக ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். வேட்பாளர்கள் பட்டியல் 3 நாட்களில் மாவட்ட அளவில் வெளியிடப்படும்’’ என்றார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கூறும்போது, ‘‘உங்கள் கட்சி வலுவாக உள்ள, வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்களை கேளுங்கள். திமுக மாவட்டச் செயலர்கள் மூலமாக ஒதுக்க அறிவுறுத்துகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலர்கள், திமுக மாவட்டச் செயலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 30-ம் தேதிகாலை எங்கள் மாவட்டச் செயலர்களுடன் இணையவழி கூட்டம் நடத்த இருக்கிறோம். அதில் எடுக்கும் முடிவுகளின்படி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்" என்றார்.

அதிமுக ஆலோசனை

அதிமுகவை பொறுத்தவரை ஒவ்வொரு வார்டுக்கும் 2 பேரை தேர்வு செய்து, பட்டியலை மாவட்டச் செயலாளர்கள் தயாராக வைத்துள்ளனர். தலைமையின் ஒப்பதல் பெற்று அதில் ஒருவரை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்றுமாலை நடந்தது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாகவும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய வார்டுகள் மற்றும் பதவிகள் தொடர்பாகவும் மாவட்டச் செயலர்களின் கருத்துகளை இருவரும் கேட்டறிந்தனர்.

இக்கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட வழிகாட்டுதல் குழுவினரும் பங்கேற்றனர்.

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தலில் போட்டிட தகுதியான வேட்பாளர்களை நிறுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமாகா சார்பில் திருவேங்கடம், சக்திவேல், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி ஆகியோர் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை சந்தித்து தங்களுக்கு தேவையான இடங்கள் குறித்த பட்டியலை அளித்துள்ளனர்.

அண்ணாமலைக்கு அதிகாரம்

தமிழக பாஜக தலைமை அலுவலகமான தி.நகர் கமலாலயத்திலும் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி, வார்டு பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவின் அழைப்புக்காக பாஜகவினர் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x