

சென்னை: தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது சைபர் கிரைம் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘தமிழக பாஜக இளைஞர் அணி தலைவரான வினோஜ் பி.செல்வம், உண்மைக்கு மாறானதகவலை, வதந்தியை மக்களிடம் பரப்பும் நோக்கில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பு, பகைமையை உருவாக்கி, பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளது’ என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காவல் ஆணையர் எச்சரிக்கை
இதற்கிடையில், ‘மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ, பொது அமைதியை குலைக்கும் வகையிலோ வலைதளங்களில் பொய் செய்திகளையும், உண்மை செய்திகளை திரித்தும் வெளியிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.