சிட்லபாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: போலீஸ் துணையுடன் பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஏரியைச் சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்ற பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவின்படி பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. அப்போது வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு போலீஸார்  துணை நின்றனர். படம்: எம்.முத்துகணேஷ்
தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் ஏரியைச் சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்ற பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. அப்போது வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு போலீஸார் துணை நின்றனர். படம்: எம்.முத்துகணேஷ்
Updated on
1 min read

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் உள்ள ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏரி ஆக்கிரமிப்பில் உள்ள 450 வீடுகளை அகற்றுவதற்காக வருவாய்த் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏரியின் மேற்குப் பகுதியில் உள்ள பெரியார் தெருவில் பட்டா நிலங்களை ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற முயலுவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அந்தப் பகுதிகளை அளவீடு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில் வருவாய்த் துறையினர் பொதுப்பணித் துறையினர், காவல்துறையினர் இணைந்து அளவீடு செய்யும் பணியை கடந்த வாரம் மேற்கொண்டனர்.பட்டா நிலங்களை அளக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்யப்பட்டது.

நில அளவீடு செய்யப்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று 200-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித் துறையினர், வருவாய்த் துறையினர் சிட்லபாக்கம் ஏரியின் மேற்கு கரைப் பகுதியில் 2 பொக்லைன் இயந்திரங்களுடன் வந்தனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இயந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி, தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸாரும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர். பின்னர் ஏரி ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிட்லபாக்கம் ஏரியில் மேற்குப் பகுதியில் கிராம நத்தம் பகுதியில் ஏரி ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மட்டும் அளவீடு செய்யப்பட்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டன. நீதிமன்ற உத்தரவின்படி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in