Published : 29 Jan 2022 07:37 AM
Last Updated : 29 Jan 2022 07:37 AM

அதிமுக சார்பில் சமூக வலைதள தேர்தல் பரப்புரை தொடக்கம்

ஆவடி: 'உயிரைக் காப்பாத்த மாஸ்க் போடுங்க! - ஊரைக் காப்பாத்த இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்க’ என்ற வாசகத்துடன் சமூக வலைதளம் மூலம் ஆவடி அதிமுகவினர் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதன் மூலம் அதிக வாக்குகளைப் பெறலாம் என அதிமுக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெருநகராட்சியாக இருந்த ஆவடி, கடந்த 2019-ம் ஆண்டு மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. மாநகராட்சியாக உருவாக்கப்பட்டு, முதல் தேர்தலை தற்போது ஆவடி சந்திக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 48 வார்டுகளைக் கொண்ட ஆவடி மாநகராட்சியில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 33 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆவடி மாநகராட்சியின் முதல் தேர்தல் என்பதால், அதிக வார்டுகளில் வெற்றி பெற்று, மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளைக் கைப்பற்ற திமுகவும், அதிமுகவும் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன.

அதே நேரத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. ஒரிரு நாட்களில் அப்பட்டியல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆவடி அருகே உள்ள கோவில்பதாகை பகுதி அடங்கிய ஆவடி மாநகராட்சியின் 12-வது வார்டு அதிமுகவினர், சமூக வலை தளம் மூலம் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.

அவர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள போஸ்டரில், ‘உயிரைக் காப்பாத்த மாஸ்க் போடுங்க! - ஊரைக் காப்பாத்த இரட்டை இலைக்கு ஓட்டுப் போடுங்க’ என்ற வாசகத்தோடு இரட்டை இலை சின்னத்தை இடம்பெறச் செய்துள்ளனர்.

வாக்காளர்கள் பெருமளவில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வரும் சூழலில், இந்த போஸ்டர், அதிக வாக்குகளை அறுவடை செய்யும் என அதிமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x