

சென்னை: சென்னை கிண்டியில் ரூ.35 கோடி மதிப்பில் 6.8 ஏக்கர் பரப்பளவில் நடந்து வரும் வேளாண் பூங்கா பணிகளை வரும் மார்ச் இறுதிக்குள் முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை கிண்டி கத்திப்பாரா அருகில், 6.8 ஏக்கர் பரப்பில் வேளாண் துறையின் வேளாண் வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் சார்பில் பசுமைப் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பூங்காவுக்கு உள்ளேயும், வெளியிலும், அகலமான நடைபாதை அமைக்கப்படுகிறது.
வண்ணத்துப் பூச்சி பூங்கா
மேலும், நறுமண தாவரங்கள், பூச்செடிகளை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பலவகையான மரங்கள், பூச்செடிகள், புல்வெளிகள் என பூங்கா முழுவதும் பசுமையான சூழல் இருக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. இதுதவிர, இப்பூங்காவில் ரூ.15 லட்சம் மதிப்பில் வண்ணத்துப் பூச்சி பூங்காவும் அமைக்கப்படுகிறது.
பூங்காவில் 3 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்படுகிறது. தரைதளத்தில் உணவு அருந்தும் இடம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் அரங்குகள், பயிற்சி அரங்குகள் இடம்பெறுகின்றன. முதல் மற்றும் 2-ம் தளங்களில் சிறிய திரையரங்கம், உணவு பரிசோதிக்கும் கூடம், பூச்சி மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம், பூச்சிகள் அருங்காட்சியகம் அமைகின்றன. மூன்றாம் தளத்தில் அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் அமைகின்றன.
உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் அரங்கங்களில், மலைப்பகுதிகளில் விளையும் பொருட்கள் கண்காட்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்பூங்காவில் இயற்கை வேளாண்மை, காளாண் வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைப்பது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் தொடர்பான நேரடி மாதிரிகள், செயல் விளக்கங்கள், பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
பூங்காவுக்கான பணிகள் வேகமாக நடந்துவரும் நிலையில், மார்ச் இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.