முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்த ரூ.2,42,160 கோடி முதலீடு எங்கே?- அமைச்சர் தங்கமணிக்கு கருணாநிதி கேள்வி

முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்த ரூ.2,42,160 கோடி முதலீடு எங்கே?- அமைச்சர் தங்கமணிக்கு கருணாநிதி கேள்வி
Updated on
4 min read

முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,42,160 கோடி ரூபாய் முதலீடு என்று ஏட்டளவில் குறிப்பிட்டுவிட்டு, பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டும், பத்தில் ஒரு பங்கு மட்டும் தானே நடந்திருக்கிறது? என்று தொழில்துறை அமைச்சர் தங்கமணிக்கு திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பொதுத் தேர்தல் வருகிறது என்றதும், அதிமுகஅமைச்சர்கள், தங்களை நேர்காணலுக்கே அழைக்கவில்லையே; சம்பாதித்த சொத்துக்கள், வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துக்கள், மறைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான ரூபாய் ஆகியவற்றின் விவரங்கள் எல்லாம் தெரிந்து விட்டதா?

இனி போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காதா என்பதற்காகத் தங்களுடைய பெயரில் ஒரு நீண்ட அறிக்கையினை - அதிலே ஏதாவது பொருள் இருக்கிறதா இல்லையா என்று கூடப் பார்க்காமல் - விடுப்பதோடு, அனைத்து நாளேடுகளிடமும் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது தமிழகத்தில் தொழில் அமைச்சராக உள்ள தங்கமணி என்பவர் எனக்குப் பதில் கூறி ஒரு நீண்ட அறிக்கை கொடுத்துள்ளார்.

நான் வெளியிட்ட அறிக்கையில் ஏதோ உண்மைக்கு மாறான விவரங்களைக் கூறி தமிழக மக்களை ஏமாற்றியிருப்பதாகக் கூறுகிறார். நான் விடுத்த அறிக்கையில் எந்தப் புள்ளி விவரங்களையும் நானாகக் கற்பனை செய்தோ, இட்டுக்கட்டியோ கூறி விடவில்லை.

31-3-2016 அன்று ஒரு ஆங்கில நாளேட்டில், வெளிவந்துள்ள செய்திக் கட்டுரையில் உள்ள தகவல்களைத் தான் அப்படியே எடுத்துக் கூறி, அவற்றுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் விளக்கம் என்ன என்று கேட்டிருந்தேன். அந்த ஆங்கில நாளேடு, திமுகவின் நாளேடு அல்ல. அந்த நாளேடும் தன்னிச்சையாக, தன் கருத்தாக அல்லது கண்டுபிடிப்பாக அதிமுக அரசு பற்றி எழுதிட வில்லை.

மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் தொழில் மேம்பாட்டு அமைச்சகத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட புள்ளி விவர அறிக்கையில் உள்ள தரவுகளை யெல்லாம் எடுத்துக் காட்டி, அந்த அறிக்கை யிலே உள்ள விவரங்களை சிறிதும் கூட்டாமல் குறைக்காமல், அப்படியே வெளியிட்டிருந்தது. அந்தப் புள்ளி விவரங்களிலே ஏதாவது குறை என்றால், அதிமுக அமைச்சர் விவரங்களை அறிக்கையாக வெளியிட்ட மத்திய அரசின் அமைச்சகத்திடம் சென்று முட்டிக் கொள்ள வேண்டுமே தவிர, என்னிடம் பாய்ந்து பிறாண்டி என்ன பயன்?

மத்திய அரசின் அறிக்கையில், ''முதலீடுகளுக்கான கருத்துருக்களைச் செயலாக்கத்தின் மூலம் உண்மையிலேயே முதலீடுகளாக மாற்றி அமைத்திடும் முயற்சியில் தமிழ்நாடு பெரும் தோல்வி கண்டுள்ளது'' என்று சொல்லப் பட்டுள்ளது. இந்தத் தகவல் தவறு என்றால், அதிமுக அரசின் தொழில் அமைச்சர், மத்திய அரசின் சார்பில் அறிக்கை வெளி வந்ததும் ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை? எனது அறிக்கை வெளிவரும் வரை ஏன் காத்திருந்தார்?

மத்திய அரசின் அறிக்கையில், ''இந்தியாவில் உள்ள பத்து பெரிய மாநிலங்களில் தொழில் முதலீடுகளில் மிக மிக மோசமான நிலை தமிழ்நாட்டில் தான் நிலவுகிறது'' என்று சொல்லப்பட்டிருக்கிறதா அல்லவா? அந்த அறிக்கையில் உள்ளதைத் தான் நான் எனது அறிக்கையிலே தெரிவித்திருந்தேன். இந்தத் தகவல் உண்மை இல்லை என்றால், அதிமுக அமைச்சர் மத்திய அரசுக்குப் பதில் எழுதினாரா? மறுப்பு தெரிவித்தாரா? எந்தத் தேதியில் எழுதினார்? விவரம் கூறத் தயாரா?

திமுக ஆட்சியில் செய்யப்பட்ட முதலீடுகள் பற்றி மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக அமைச்சர் இப்போதைய அறிக்கையில் கூறியிருக்கிறார். அந்த அறிக்கையில் எப்போதாவது திமுக ஆட்சியில் தொழில் முதலீடுகளில் மிக மிக மோசமான நிலை உள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறதா? அதற்கு அமைச்சரின் பதில் என்ன?

அமைச்சர் தங்கமணியின் அறிக்கையில், ''ஏப்ரல் 2011 முதல் டிசம்பர் 2015 வரை ஈர்க்கப்பட்ட நேரடி வெளி நாட்டு முதலீடு 83,766 கோடி ரூபாயாகும்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், 13-2-2014 அன்று அதிமுக அரசின் சார்பில் படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை பக்கம் 31-ல், ''2011ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை 26,625 கோடி ரூபாய் அளவுக்கு மொத்த முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 10,660 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று குறிப் பிட்டிருந்தார்கள்.

இதிலே எது உண்மை? பட்ஜெட்டில் 10,660 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டது உண்மையா? தற்போது மிகைப்படுத்தி 83,766 கோடி ரூபாய் என்று அமைச்சர் கூறியிருப்பது உண்மையா?

13-2-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில், அதிமுக அரசின் சார்பாக நிதி நிலை அறிக்கையைப் படித்த அன்றைய தற்காலிக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அந்த அறிக்கையின் பக்கம் 31-ல் ''நமது மாநிலத்தில் தொழில் வளத்தையும் கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்க இந்த அரசு வரும் அக்டோபர் மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். இதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்று படித்தார்.

பேரவையில் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தவாறு, 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதா? இல்லையே! நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டபடி முதலீட்டாளர் மாநாடு நடத்தாமல் இருந்ததற்கு அமைச்சரின் பதில் என்ன?

2012ஆம் ஆண்டிலேயே ஒரு முறை ஒரே நாளில் 12 கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதாகவும், அதன் மூலம் 36,855 பேருக்கு வேலை கிடைக்குமென்றும், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற் சாலைகள் தொடங்குமென்றும் பூதாகாரமாக அறிவிப்பெல்லாம் செய்து, ஏடுகளில் எல்லாம் பெரிதாகச் செய்தி வெளியிட்டார்கள்.

அந்த 12 கம்பெனிகளின் முதலீடும் தமிழகத்திற்கு வந்து அவர்கள் எல்லாம் தொழில்களைத் தொடங்கி விட்டார்களா, அந்தக் கம்பெனிகளில் 36 ஆயிரத்து 855 பேர் வேலை வாய்ப்புப் பெற்றிருக்கிறார்களா என்ற விவரங்களை யெல்லாம் அரசின் சார்பில் மக்களுக்கு தெரிவித்தால் நல்லது என்று 23-4-2015 அன்று நான் கேட்டேனே; அப்போது அமைச்சர் எங்கே போயிருந்தார்?

மீண்டும் ஒரு முறை 5,081 கோடி ரூபாய்க்கு 16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தொழில் நிறுவனங்கள் இன்னமும் உற்பத்தி பணியைத் துவக்கவில்லை என்றும் செய்தி வந்ததே, அதற்கான விளக்கம் என்ன?

2015, மே மாதம் நடக்க விருந்த முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி 13-2-2015 அன்று சென்னையில் நடைபெற்ற முன்னோட்ட மாநாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மிகப் பெரிய விளம்பரம் செய்தார்களே தவிர அங்கே அந்த நிகழ்ச்சியே அந்த முன்னோட்ட மாநாட்டில் நடைபெறவில்லையே, அதற்கான காரணம் என்ன?

தமிழக அரசின் தொழில் அமைச்சர் ''குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம், வரிச் சலுகையும் தருகிறோம் என்று சொல்லி, ஆந்திர மாநிலத்திற்கு அழைக்கிறார்கள். அது போல ஆந்திர முதல்வர் இந்த வழியாகச் சென்னைக்கு வந்து செல்லும் போதெல்லாம் நம் தொழிலதிபர்களை அழைத்து குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம் என்று பேசுவார் '' என்று கூறினாரே, அதில் இருந்தே தமிழகத்தின் நிலைமை என்ன என்று தெரிகிறதே; இவர்கள் ஆளுகின்ற ஒரு மாநிலத்திற்கு வேறொரு மாநில முதல்வர் வந்து கூட்டம் போட்டு தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்றால், அதற்காக இவர்கள் வெட்கப்பட வேண்டுமே தவிர, எங்கள் மீது பாய்ந்து விழுந்து என்ன பயன் என்று நான் கேட்டிருந்தேனே, ஏன் அப்போது பதில் அளிக்கவில்லை?

முதல்வர் ஜெயலலிதா கோவையில் பேசும்போது, அவருடைய மூன்றாண்டு கால ஆட்சியில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,706 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட 33 நிறுவனங்களில், இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிலைத் தொடங்கியிருக்கின்றன என்ற விவரத்தைத் தெரிவிக்க முடியுமா என்று கேட்டிருந்தேனே, ஏன் பதிலளிக்கவில்லை?

தமிழகத்தில் எத்தனை பெரிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என்ற விவரத்தைக் கேட்டால் அமைச்சர் தனது பதிலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டதைப் பதிலாகக் கூறுகிறார் என்றால் என்ன பொருள்? அமைச்சர் மேலும் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்!

முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் 2,42,160 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கான 98 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகவும், அதில் 22,595 கோடி ரூபாய் முதலீட்டிலான 45 நிறுவனங்களின் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என்றும் தனது அறிக்கையில் அமைச்சர் கூறியிருக்கிறார்.

அப்படியென்றால், முதல்வர் ஜெயலலிதா முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்த 2,42,160 கோடி ரூபாய் முதலீடுகளில் வெறும் 22,595 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை மட்டுமே பெற்றதாகத் தானே அமைச்சரின் அறிக்கை கூறுகிறது.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,42,160 கோடி ரூபாய் முதலீடு என்று ஏட்டளவில் குறிப்பிட்டுவிட்டு, பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டும், பத்தில் ஒரு பங்கு மட்டும் தானே நடந்திருக்கிறது? நிதி நிலை அறிக்கையிலும், முதல்வர் அறிவிப்பிலும், தொழிலமைச்சர் அறிக்கையிலும் தமிழ்நாட்டின் முதலீடுகள் பற்றி ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றனவே? அதற்கு அமைச்சரின் விளக்கம் எங்கே?

அமைச்சரின் அறிக்கை, அவர் சொல்லியிருக்கும் பொய்களை விட அதிகமாக முதல்வர் ஜெயலலிதா முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார் என்ற தகவலைத் தமிழக மக்களுக்குத் தருவதற்குத் தான் உதவுகிறதே தவிர, மத்திய அரசின் புள்ளி விவரத்தை எடுத்துக்காட்டி, ஆங்கில நாளேடு எழுப்பிய கேள்விகளை நான் எடுத்து எழுதி அதற்கு என்ன விளக்கம் என்று கேட்டதற்கு தொழில் அமைச்சர் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

மாறாக நான் ஏதோ பொய் கூறுவதாக அமைச்சர் அறிக்கையிலே கூறுகிறார். தமிழ்நாட்டு மக்களே, வாக்களிப்பதற்கு முன் ஒரு கணம் யோசியுங்கள்; யார் கூறியது பொய் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிமுக ஆட்சியில்தான் அதிகரித்தது என தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி கருணாநிதிக்கு பதில் கூறினார். விரிவான செய்திக்கு... >அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்தது: கருணாநிதிக்கு அமைச்சர் தங்கமணி பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in