கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: விசாரணை பிப்.25-க்கு ஒத்திவைப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

உதகை: நீலகிரி கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை பிப்ரவரி 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.

இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இதனிடையே, கார் விபத்து ஒன்றில் கனகராஜ் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் வெளிவந்தனர். மேலும், வழக்கு தொடர்பாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷை போலீஸார் கைது செய்தனர்.

கரோனா பரவல் காரணமாக மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேரடி விசாரணை ரத்து செய்யப்பட்டது. ஆன்லைனில் முக்கிய வழக்குகள் விசாரணை மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் சிறப்பு வழக்கிறஞர் ஷாஜகான் சென்னையிலிருந்து ஆன்லைனில் விசாரணைக்கு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in