

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (ஜனவரி 28-ஆம் தேதி) காலை 10 மணிக்கு தொடங்கியது.
பல்வேறு பகுதிகளிலும் வேட்பாளர்கள் உற்சாகமாக மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை முதல் தங்களது வேட்புமனுவை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என்றும், வரும் ஜனவரி 29-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாள் என்பதால் அன்றைய தினமும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்களை ஏற்று வாக்குப்பதிவு நேரத்தினை காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நிர்ணயம் செய்து ஆணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக கண்டனம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை 26 ஆம் தேதி வெளியிட்டுவிட்டு வெறும் ஒருநாள் இடைவெளியில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளது நியாயமற்றது என தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எவ்வித கால அவகாசமும் வழங்காமல் உடனடியாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தேதி உடனடியாக அறிவிக்கப்பட்டது ஏன்? இதிலிருந்து ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருக்கலாம் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. தேர்தல் தேதி அறிவிப்பிலேயே இதுபோன்ற அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதில் இருந்து, தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
கட்சிகள் சுறுசுறுப்பு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் சுறுசுறுப்படைந்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆலோசனைக் கூட்டம் காலையிலேயே தொடங்கிவிட்டது. காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியன திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்து வருகின்றன.
இந்நிலையில், பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் மூத்த நிர்வாகி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுக தரப்பில் இன்று மாலை பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
புகார் எண் அறிவிப்பு; இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.