Published : 28 Jan 2022 07:55 AM
Last Updated : 28 Jan 2022 07:55 AM

2030-க்குள் 46 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: 2030-க்குள் தமிழத்தில் 46 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தொழில்துறை மேம்பாடு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் இருந்து:

தமிழகத்திற்கு ரூ.23 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளைக் கொண்டுவர வேண்டும். 2030-க்குள் தமிழத்தில் 46 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதுவே தமிழக அரசின் பிரதான குறிக்கோள். இதனை எட்ட, நாங்கள் இதுவரை மூன்று தொழில் முதலீட்டு மாநாடுகளை நடத்தியுள்ளோம். அதன் வாயிலாக பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.56,229.54 கோடி மதிப்பில் 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தொழில் முதலீட்டுக் கொள்கைகளை லகுவானதாக ஆக்கி தமிழகத்தை 1 ட்ரில்லியன் பொருளாதாரமாகக் கட்டமைப்போம்.

1.74 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்துள்ளோம். புதிய தொழில் மண்டலங்களும், தொழில்களுக்கான வங்கிகளும் உருவாக்கப்பட்டு வருகிறது. எலக்ட்ரானிக்ஸ், உணவு, மரச்சாமான்கள் எனத் துறை சார்ந்த தொழில் மண்டலங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அனைத்துத் தொழிற்கூடங்களுக்கும் தடையற்ற மின்சார விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளையில் மரபுசாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது. ஃபின்டெக் செல், ஏற்றுமதி செல், வொர்க் லேப்செல் என தொழில்துறை வளர்ச்சியில் நிபுணர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது சிறப்பு சலுகைகள் மூலம் தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க ஊக்குவிக்கிறோம்.

குறிப்பாக விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் தொழிற் பூங்காக்களை அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.

டெஸ்லாவின் எலான் மஸ்குடன் தொழில் தொடங்கும் முனைப்பு குறித்த கேள்விக்கு, "வெற்று ட்வீட்கள் முதலீடு ஆகிவிடாது. ட்வீட் என்பது ஒரு சிறிய தூண்டுகோள். இன்னும் நிறைய பேச்சுவார்த்தை நடத்தவேண்டி இருக்கிறது. நாங்கள் டெஸ்லாவுக்கு வழங்கக்கூடிய சலுகைகள் பற்றியும் தமிழகத்தில் எலக்ட்ரிக் வாகனத்துக்கான சூழலியல் பற்றியும் பேசியுள்ளோம். நிலம் தொடர்பான விவகாரங்களில் துரிதமான அனுமதிக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம். இருப்பினும், இறக்குமதி வரியில் சலுகை உள்ளிட்ட விவகாரங்கள் மத்திய அரசின் கைகளில் அல்லவா இருக்கின்றன" என்றார்.

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு மிகவும் பிரபலமானது. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அந்நிறுவனம், அதன் இந்தியப் பிரிவுக்கான பெயரைக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் டெஸ்லா நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டது.

இதனையடுத்து, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை அமைக்க தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில அரசுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

தமிழகத்தின் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவும் மஸ்க்கை டெஸ்லா ஆலை தொடங்க அழைப்பு விடுத்தார். "இந்தியாவின் டெட்ராய்ட் ஆன தமிழகத்திற்கு உங்களை வரவேற்கிறோம் மிஸ்டர் மஸ்க். தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இங்கு தொழிற்சாலை அமைப்பதைத் தமிழக அரசு உறுதி செய்யும். எங்களது திறமையான இளைஞர்கள் நீங்கள் வேலையில் கவனம் செலுத்தும்போது அனைத்து சவால்களையும் சமாளிக்க உங்களுக்கு உதவுவார்கள். நாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவோம்" என்று டிஆர்பி ராஜா டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x