Published : 28 Jan 2022 06:25 AM
Last Updated : 28 Jan 2022 06:25 AM

ராக்கெட் அறிவியல் பயிற்சியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர்: தொடக்க நிகழ்வில் பத்மபூஷன் சிவதாணு பிள்ளை தகவல்

சிவதாணு பிள்ளை

சென்னை: ராக்கெட் அறிவியல் பயிற்சியில் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என ராக்கெட் அறிவியல் தொழில்நுட்ப தொடக்க நிகழ்வில் பத்மபூஷன் சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.

தமிழக அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் தொடக்க நிகழ்வு, ஆன்லைனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார், ஐஏஎஸ் தலைமையேற்றார்.

அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், ரஷ்யன் மையத்தின் அறிவியல் மற்றும் கலாச்சார இயக்குநர் கென்னடி ரொகாலிவ், இந்தோ ரஷ்யன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பொதுச்செயலர் பி.தங்கப்பன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் விற்பனைப் பிரிவு பொதுமேலாளர் டி.ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வைத் தொடங்கி வைத்து ‘கலாம் விஷன் இன் யூத்’ எனும் தலைப்பில் உரையாற்றிய பிரம்மோஸ் ஏரோபேஸ் நிறுவனத்தின் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான பத்மபூஷன் ஏ.சிவதாணு பிள்ளை பேசியதாவது:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்முறையாக ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் இந்த சிறப்பான முயற்சிக்கு எனது வாழ்த்துகள்.

கிராமப்புற குழந்தைகள், எங்கோ ஒரு கிராமத்தில் நாம் இருக்கிறோம், நமக்கும் ராக்கெட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்காமல், கிராமப்புற குழந்தைகளும் முயற்சித்தால் ராக்கெட் தொழில்நுட்பத்தை அவர்களாலும் தெரிந்துகொள்ள முடியும். ராக்கெட் தொழில்நுட்பம் என்பது இன்றைக்கு பலருக்கும் என்னவென்றே தெரியாத மர்மதேசமாக இருக்கிறது. இதை மாற்றி அனைவரும் அதனை தெரிந்துகொள்ளுமாறு செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

ஜன.29 அன்று தொடங்கும் இந்த ராக்கெட் அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி, வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6 மணிக்குதொடங்கி 1 மணி நேரம் நடக்கும். இந்தப் பயிற்சியானது 15 இணையவழி தொடர் நிகழ்வுகளாக நடைபெறும். இந்தச் சிறப்புமிக்க பயிற்சியில் பங்கேற்று, சிறந்த முறையில் ராக்கெட் தொழில்நுட்பம் பற்றிய அறிவுத்திறனை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளிக் குழந்தைகள், ரஷ்யாவுக்கு சிறப்புப் பயணமாக அழைத்துச்செல்லப்பட இருக்கிறார்கள் என்பது இந்த நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து, இந்த நிகழ்வை இணைந்து நடத்தும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். இத்தொடக்க நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வை தவறவிட்டவர்கள் https://www.htamil.org/00228 என்ற லிங்க்கில் காணலாம்.

‘இந்து தமிழ் திசை’யின் யூ-டியூப் நிகழ்ச்சிகளை பார்க்க https://www.htamil.org/00220 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளுங்கள். இந்த நிகழ்வின் யூ-டியூப் பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x