Published : 28 Jan 2022 05:57 AM
Last Updated : 28 Jan 2022 05:57 AM
சென்னை: மருத்துவப் படிப்புக்கான சிறப்புப்பிரிவினர் கலந்தாய்வில் 71 எம்பிபிஎஸ், 2 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 73 இடங்கள் நிரம்பின. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு இன்று கலந்தாய்வு தொடங்குகிறது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவகல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு 6,999 எம்பிபிஎஸ் இடங்கள், 1,930 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,145 எம்பிபிஎஸ் இடங்கள், 635 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இந்தப் படிப்புகளுக்கு 2021–22-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 24 ஆயிரத்து 949 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 14 ஆயிரத்து 913 மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு 1,806 பேர் இடம் பெற்றுள்ளனர்.
விடுபட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு
உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இடம்பெறாத மாணவர்கள் இன்று காலை 8 மணிக்குள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினர் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை, ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 71 எம்பிபிஎஸ் இடங்கள், 2 பிடிஎஸ் இடங்கள் என 73 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதைதொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு இன்று கலந்தாய்வு நடைபெற உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 436 எம்பிபிஎஸ் இடங்கள், 97 பிடிஎஸ் இடங்கள் என 533 இடங்களுக்கு இன்றும் நாளையும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
வரும் 30-ம் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு https://www.tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் நடைபெறும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT