

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப்பாடல் என்பதை உணர்வதாக இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகம் அருகில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிமண்டல அலுவலகத்தில் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்எம்என் சுவாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சிமுடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, ரிசர்வ் வங்கி பெண் அதிகாரி உட்பட சிலர் உட்கார்ந்திருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை வாய்ப்பாட்டாக பாட வேண்டும். இசைத்தட்டு வாயிலாக இசைக்கக் கூடாது.தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என பல அறிவுறுத்தல்களை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதிகாரிகள் - செய்தியாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, நீதிமன்ற உத்தரவு இல்லை என்று கூறி,அதிகாரிகள் சென்றுவிட்டனர். வலைதளங்களில் இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்எம்என் சுவாமி மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் அதிகாரிஉள்ளிட்டோர் நேற்று சந்தித்தனர்.
குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது அதிகாரிகள் எழுந்து நிற்காததற்கான விளக்கத்தை அமைச்சரிடம் அளித்தனர். அமைச்சரும் இதுகுறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி மண்டலஅலுவலகம் நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் கலாச்சாரம், மொழிக்கு மரியாதை செலுத்துவதன் அடையாளமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. எனினும்,அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பாடல் குறித்து எதிர்பாராத மற்றும் வருந்தத்தக்க தேவையற்ற கூற்றுகள் எழுப்பப்பட்டன.
‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தமிழகத்தின்மாநிலப்பாடல் என்பதை உணர்கிறோம். ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பு என்ற முறையில், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள், நடைமுறைகளை நாங்கள்மதிக்கிறோம். இதுகுறித்து, அமைச்சர் தியாகராஜனை சந்தித்து எங்கள் நிலைப்பாட்டை மண்டல இயக்குநர் சுவாமி தலைமையிலான அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.