Published : 28 Jan 2022 07:32 AM
Last Updated : 28 Jan 2022 07:32 AM

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாமக நிறுவனர் ராமதாஸ்:குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தவறியுள்ளனர். தவிர, அவ்வாறு செய்யத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக கடந்தமாதம் 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து மரியாதை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டே இதை செய்ய மறுத்திருப்பது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல். தமிழ்த்தாயை அவமதித்தவர்களை மன்னிக்கக் கூடாது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: ரிசர்வ் வங்கிஅதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி மலிவாக நடந்துகொள்வதை ஏற்கமுடியாது. இத்தகைய விதி மீறலில்ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமல் தடுப்பதும் அவசியம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட செய்தியில், ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க மறுப்பது விதிமீறல் மட்டுமல்ல, மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பதும் ஆகும். இது கடும் கண்டனத்துக்குரியது. நிகழ்ந்த சம்பவத்துக்கும், இனிமேல் இதுபோல் நடக்காமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

முற்றுகைப் போராட்டம்

இதற்கிடையே, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அலட்சியம் காட்டியதை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் சென்னை ராஜாஜி சாலையில் நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோர், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷம் எழுப்பினர்.

சம்பந்தப்பட்ட ரிசர்வ் வங்கிஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பூக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கூறும்போது, ‘‘சென்னைரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அவமதித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர்களை காவல் துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ரிசர்வ் வங்கி அதிகாரிகளை சிறைபிடிப்போம்’’ என்றார்.

இதேபோல, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x