

சென்னை: தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அமைத்துள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியின் பிளஸ் 2 மாணவி சிலநாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவர், மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட கோரி தமிழக பாஜக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாணவி தற்கொலை விவகாரம் குறித்து நேரில்விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க 4 பேர் குழுவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங்வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூரில் பள்ளி நிர்வாகத்தால் மதமாற்றம் செய்ய வற்புறுத்தப்பட்ட சிறுமி தற்கொலை செய்துகொண்டது கவலை, வருத்தம் அளிக்கிறது. இதுதொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்தமத்திய பிரதேச மாநில பாஜக துணை தலைவரான சந்தியா ரேஎம்.பி., நடிகையும், முன்னாள் பாஜக மகளிர் அணி செயலாளருமான விஜயசாந்தி, மகாராஷ்டிரா மாநில பாஜக துணைத் தலைவரும், மகளிர் உரிமைப் போராளியுமான சித்ரா தாய் வாக், கர்நாடகமாநில மகளிர் அணி தலைவர் கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய குழுவை பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா அமைத்துள்ளார். இவர்கள் 4 பேரும் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை நடத்தி விரைந்து அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.