Published : 28 Jan 2022 08:24 AM
Last Updated : 28 Jan 2022 08:24 AM
விருத்தாசலம்: கடலூர் அருகே பயன்பாட்டில் இல்லாத வீடு ஒன்று நேற்று இடிந்துவிழுந்ததில் 2 மாணவர்கள் உயிர்இழந்தனர். மேலும் ஒரு மாணவர் கவலைக்கிடமான நிலையில், புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
கடலூரை அடுத்த ராமாபுரம் வண்டிக்குப்பத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி மகன் வீர சேகர்(17), எஸ்.புதூரைச் சேர்ந்த மாணிக்கவேல் மகன் சுதீஷ்குமார்(17) மற்றும் தணிகாசலம் மகன் புவனேஷ்குமார்(17) ஆகிய 3 பேரும் அங்கு உள்ள வெள்ளக்கரை அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால், 3 பேரும் சேர்ந்து விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
நேற்று 3 பேரும் வண்டிக்குப்பத்தில் 2013-ம் ஆண்டு கட்டப்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் யாரும் குடியேறாத நிலையில் உள்ள 130 வீடுகள் கொண்ட பகுதிக்குச் சென்றனர். வீடுகள் தரமாக இல்லாத காரணத்தால் அந்த வீடுகளில் யாரும் குடியேற வரவில்லை. தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாததால் அந்த கட்டிடம் ஆங்காங்கே விரிசலுடன் இருந்துள்ளது.
அப்போது மாணவர்கள் 3 பேரும்ஒரு வீட்டின் உள்ளே அமர்ந்துவிளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்துள்ளது. அவர்கள் 3 பேரும் வெளியே வர முயற்சிப்பதற்குள் மேற்கூரையும் இடிந்து விழுந்துள்ளது. இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிஉள்ளனர். அதேநேரத்தில் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களால் முடியாததால் கடலூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் வீரசேகர், சுதீஷ்குமார் ஆகியோர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், புவனேஷ்குமாரை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்வர் நிவாரணம்
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT