Published : 28 Jan 2022 08:37 AM
Last Updated : 28 Jan 2022 08:37 AM

மேட்டூர் அணையில் இருந்து இன்றுடன் டெல்டாவுக்கு நீர் திறப்பு நிறுத்தம்

சேலம்:மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு கடந்தஜூன் 12-ம் தேதி முதல் திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்றுடன் (28-ம் தேதி) நிறுத்தப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களின் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு, தொடர்ந்து ஜனவரி 28-ம் தேதி வரை விடப்படும். கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையிலும், ஜூன் 12-ம்தேதி டெல்டா பாசனத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார்.

தென்மேற்கு மற்றும் வட கிழக்குப் பருவ மழைக் காலங்களில் தமிழகத்தில் சராசரிக்கும் கூடுதலாக மழை பெய்ததால், மேட்டூர்அணை நவம்பர் மாதத்தில் முழுக்கொள்ளளவை எட்டியதுடன், அணையில் இருந்து பல வாரங்களுக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. டெல்டா பாசனத்துக்கான நீர் தேவையும் குறைவாக இருந்தது.

இதனிடையே, டெல்டாவுக்கான மேட்டூர் அணை நீர் திறப்பு காலம் இன்றுடன் (28-ம் தேதி) முடிவடைகிறது. இந்நிலையிலும், அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நேற்று விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு விநாடிக்கு 897 கனஅடி (நேற்று முன்தினம் 885 கனஅடி) வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 109 அடியாக (நேற்று முன்தினம் 109.40 அடி) இருந்தது. அணையின் நீர் இருப்பு 79.99 டிஎம்சி-யாக இருந்தது.

அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பதால், வரும் பாசன ஆண்டில், உரிய காலமான ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

2021 ஜூனில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையிலும், ஜூன் 12-ல் டெல்டா பாசனத்துக்கான நீர் தேவையை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் அணையை திறந்து வைத்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x