

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் பள்ளியில் மதமாற்ற பிரச்சாரம் எதுவும்நடைபெறவில்லை என மாவட்டகல்வி அலுவலரின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறிருப்பதாவது: தற்கொலை செய்து கொண்ட மாணவி, தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் படித்து வந்தார். அவர் பள்ளி அருகில் உள்ள பள்ளியை சார்ந்தோர் வசிக்கும் இல்லத்தில் தங்கி கல்வி பயின்று வந்துள்ளார்.
மாணவிக்கு உடலிலும், உதட்டிலும் வெண்புள்ளிகள் உள்ளதாக விசாரணையில் தெரிய வருகிறது. 2020 கரோனா பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்பு, பள்ளிக்கு விடுமுறை விடும்போது, இல்லத்தில் உள்ளமற்ற மாணவிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லும்போது, இம்மாணவி மட்டும் ஊருக்கு செல்லாமல் அங்கேயே தங்கி விடுமுறையை கழித்து வந்துள்ளார்.
கரோனா காலத்துக்குப் பின்பு, காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மார்ச் 2020-ல் 10-ம் வகுப்பு தேர்ச்சி அறிவிக்கப்பட்டபோது 487 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கரோனா ஊரடங்கு காரணமாக இணையவழிக் கல்வி நடைபெறும்போது, இம்மாணவி இணையவழி வகுப்பில் பங்கு பெறவில்லை.
ஜன.10-ம் தேதி மாணவிக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் (வயிற்று வலி மற்றும் வாந்தி) பெற்றோருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டு அவரின் சொந்தஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டுஉள்ளார். ஜன.15-ம் தேதி பள்ளிக்குபோலீஸார் சென்று விசாரித்தபோதுதான், அந்த மாணவி விஷம்குடித்து தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவரம் தெரியவந்ததாக பள்ளி தலைமையாசிரியை ஆரோக்கியமேரி தெரிவித்தார்.
மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் 5,270 இந்து மாணவ, மாணவிகளும், 2,290 கிறிஸ்தவ மாணவ, மாணவிகளும், 179 முஸ்லிம் மாணவ, மாணவிகளும் கல்வி பயின்றுள்ளனர். இப்பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் மற்றும்மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட போதெல்லாம் மாணவ, மாணவிகளிடமிருந்து மதம் சார்ந்த புகார்கள் ஏதும் வரவில்லை.
இப்பள்ளியில் மதரீதியானபிரச்சாரங்கள் ஏதும் தலைமைஆசிரியராலோ அல்லது மற்ற ஆசிரியர்களாலோ, மாணவ - மாணவிகளிடம் செய்யப்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.