கோவையில் முதல்முறையாக மத்திய அரசின் தேசிய தர உறுதி சான்று பெற்ற எஸ்.எஸ்.குளம் ஆரம்ப சுகாதார நிலையம்

மத்திய அரசின் தேசிய தர உறுதி சான்று பெற்ற கோவை எஸ்.எஸ்.குளம்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
மத்திய அரசின் தேசிய தர உறுதி சான்று பெற்ற கோவை எஸ்.எஸ்.குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
Updated on
1 min read

அரசு மருத்துவமனைகளின் தரத்தை உறுதி செய்ய அவற்றின் கட்டமைப்பு வசதி, பராமரிப்பு, தூய்மை, நோயாளிகளை கையாளும் விதம், மருத்துவ கழிவுகளை கையாள்வது ஆகியவற்றை ஆய்வு செய்து மத்திய சுகாதாரத்துறை தேசிய தர உறுதி சான்று (என்ஃகியூஏஎஸ்) வழங்கி வருகிறது.

இத்தகைய சான்று பெறும் அரசு மருத்துவமனைக்கு ஊக்கத்தொகை, இதர வசதிகளை மேற்கொள்ள 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. அதன்படி, கோவையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் முறையாக சர்க்கார் சாமக்குளம் (எஸ்.எஸ்.குளம்) ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய சுகாதாரத் துறை தேசிய தர உறுதி சான்று வழங்கியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் அருணா, எஸ்.எஸ்.குளம் வட்டார மருத்துவ அலுவலர் யக்ஞ பிரபா ஆகியோர் கூறியதாவது: முதல்கட்டமாக மாநில சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2021 மார்ச் மாதம் மருத்துவ குழுவினர் இங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து மத்திய குழுவினர் கடந்த நவம்பர் மாதம் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் 100-க்கு 87.15 சதவீத மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு, தேசிய தர உறுதி சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், சிகிச்சை பெறும் நோயாளிகளின் கருத்தையும் பதிவு செய்து இந்த சான்றை வழங்கியுள்ளனர்.

மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுவும் ஒன்று. இங்கு உள் நோயாளிகள், புற நோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவு, விபத்து, அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வகம் என மொத்தம் 9 துறைகள், 30 படுக்கை வசதிகள் உள்ளன. முன்பு இங்கு மகப்பேறு அறுவைசிகிச்சை கிடையாது. தற்போது இங்கேயே மகப்பேறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, குடும்பநல அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. எக்ஸ்ரே-வசதி உள்ளது. இங்கு மாதத்துக்கு 15 முதல் 20 பிரசவங்கள் வரை நிகழ்கின்றன.

தினமும் 250 பேர் பயன்

தினசரி புறநோயாளிகளாக சுமார் 250 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். சரவணம் பட்டி, வெள்ளானைப்பட்டி, கணேசபுரம், வெள்ளமடை, அக்ரஹார சாமகுளம், கள்ளிப்பாளையம், குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த மருத்துவமனையால் பயனடைந்து வருகின்றனர். சிகிச்சைக்கு தேவைப்படும் ரத்தத்தை, ரத்த வங்கியில் இருந்து பெற்று, இருப்பு வைத்து, உபயோகிக்கும் வசதியை விரைவில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவை ஏற்படுத்த அரசு அனுமதிக்காக காத்திருக்கிறோம். மருத்துவமனையின் உள் கட்டமைப்பு, மருத்துவ உபகரணங்களை மேம்படுத்த பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதி மூலம் சுமார் ரூ.50 லட்சம் அளவுக்கு உதவிகள் கிடைத்தன. இதுதவிர, பல தன்னார்வ அமைப்பினரும் உதவி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in