

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, குடிமைப் பொருள் வழங்கல் முதுநிலைதரக் கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,296.88கோடி மதிப்பில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜன.4-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இந்நிலையில், சில பகுதிகளில் வழங்கப்பட்ட பொருட்களில் குறைபாடுகள் இருந்ததாக புகார்கள்எழுந்தன. மேலும், சட்டப்பேரவைஎதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், பொருட்களின் தரம் மற்றும் அளவுகுறித்து புகார் எழுப்பினர். இந்ததிட்டத்தில் ரூ.500 கோடி வரைஊழல் நடைபெற்றதாக எதிர்க்கட் சித் தலைவர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக கடந்த 21-ம்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், "பொங்கல் பரிசுப்பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் வரக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தவறு செய்யதவர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பொங்கல் பரிசுப்பொருட்கள் தரம் குறித்த புகார்கள்தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாகசெயல்பட்டதாக, குடிமைப் பொருள் வழங்கல் முதுநிலைக் கட்டுப்பாட்டு மேலாளர் சுப்பிரமணிஎன்பவரை பணியிடை நீக்கம்செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கியதில் சிலஇடங்களில் ஏற்பட்ட குளறுபடிகளை ஆய்வு செய்து, முதல்வரிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் ரேஷன்கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த, விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.