Published : 28 Jan 2022 08:31 AM
Last Updated : 28 Jan 2022 08:31 AM

புதுச்சேரி குடியரசு தின விழாவில் மதிமுக நிர்வாகி அணிந்திருந்த கருப்பு துண்டை அகற்ற காவல்துறையினர் உத்தரவு: வைகோ, வீரமணி கண்டனம்

கறுப்பு துண்டை காரணம் காட்டி அனுமதிக்க மறுத்த காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதுநிலை காவல் கண்காணிப்பாளரிடம் முறையிடும் மதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்.

புதுச்சேரி/சென்னை

புதுச்சேரி குடியரசு தின விழாவில் பங்கேற்க சென்ற மதிமுக நிர்வாகி அணிந்திருந்த கருப்பு துண்டை காவல்துறையினர் அகற்ற உத்தரவிட்டதற்கு வைகோ, வீரமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

புதுச்சேரியில் ஜனவரி 26 அன்று நடந்த குடியரசு நாள் விழாவில் பங்கேற்க மதிமுக புதுச்சேரி மாநில அமைப்பாளர் கபேரியல், புதுச்சேரி அரசின் அழைப்பின் பேரில் சென்று இருக்கிறார். விழா நடைபெற்ற இடத்தின் நுழைவு வாயிலில் இருந்த காவல்துறையினர், கபேரியல் அணிந்திருந்த கருப்புத்துண்டை அகற்றி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அவரை தடுத்துள்ளனர்.

கருப்புத்துண்டு என்பது திரா விட இயக்கத்தின் அடையாளம். பெரியார் கருப்பு சட்டை அணிவதையே திராவிட இயக்கத் தொண்டர்களுக்கு பெருமிதமாக வழிகாட்டி உள்ளார். பெரியாரின் தொண்டரும், மதிமுக மாநில அமைப்பாளருமான கபேரியல், கருப்பு துண்டை அகற்ற வேண்டும் என்று புதுச்சேரி காவல்துறை அடாவடியாக கூறியபோது, “கருப்புத்துண்டு அணிந்ததால் விழாவுக்கு அனுமதிக்கவில்லை என்று எழுதித் தாருங்கள்” என்று கேட்டுள்ளார். அதன் பின்னர் வாக்குவாதம் ஏற்பட்டு, போராட்டம் நடத்த அவர் முனைந்த பிறகுதான் குடியரசு நாள் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளார். புதுச்சேரி காவல்துறையினரின் அத்துமீறலை வன்மையாக கண்டிப்பதுடன், புதுச்சேரி அரசு எல்லை மீறி நடந்த காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக் கையில், "புதுச்சேரியில் மதிமுகஅமைப்பாளர் கபேரியல், வழக்கமாக அவர் அணியும் கறுப்புத்துண்டை தோளில் போட்டுக்கொண்டு சென்றபொழுது, அந்தத்துண்டை அகற்றும்படி காவல்துறையினர் கூறியது வன்மையான கண்டனத்திற்குரியது. சட்டப்படி அவருக்குள்ள தனி மனித உரிமையைப் பறிப்பதும் ஆகும். காவி அணிந்து செல்ல உரிமை இருக்கும்போது, கறுப்புத் துண்டு அணிந்து செல்வது எப்படி தவறு? " என்று தெரிவித்துள்ளார்.

காவல் அதிகாரியிடம் முறையீடு

இந்நிலையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மதிமுக அமைப்பாளர் கபிரியேல்தலைமையில் மதிமுகவினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் உருளையன்பேட்டையில் உள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று காவல் கண்காணிப்பாளர் தீபிகாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், குடியரசு தினவிழாவில் கட்சி அமைப்பாளர் யார் என்று கூட தெரியாமல் தரக்குறைவாக நடத்திய ஆய்வாளர் சண்முகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x