Published : 28 Jan 2022 08:33 AM
Last Updated : 28 Jan 2022 08:33 AM

நயினார் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வலியுறுத்தல்

விருத்தாசலம்

அதிமுவை விமர்சித்து பேசிய சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினருமான அருண்மொழித்தேவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் வந்திருந்த கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், புவனகிரி சட்டப்பேரவை உறுப்பினருமான அருண்மொழித்தேவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மக்கள் பிரச்சினைகளுக்காக தினந்தோறும் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதோடு களம் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவையிலும் உடனுக்குடன் வாதத்தில் ஈடுபட்டு, பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நிகழ்ந்த பாஜக கூட்டத்தில், அதன் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, அதிமுகவை விமர்சித்தும், ஆண்மையுள்ளவர்களா என்ற தொனியிலும் பேசியுள்ளார். இதை அங்கிருந்த அக்கட்சியின் தலைவர் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் ரசித்துக் கொண்டிருந்தனர்.

அவரது பேச்சை அப்போதே கண்டிக்கத் தவறிய அதன் தலைவர் அண்ணாமலை, எங்கள் கட்சித் தலைமை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேச முயற்சித்துள்ளார். அது முடியவில்லை. அதனால், அவர் அப்படி பேசவில்லை. அவர் பேச முற்பட்டது வேறு என்ற நியாயப்படுத்தும் வகையில் பேசுவது ஏற்கக் கூடியது அல்ல. நயினார் நாகேந்திரனின் கண்ணியமற்ற அநாகரிகமான பேச்சு கண்டிக்கத்தக்கது. எனவே அவர் அதிமுகவை விமர்சித்து பேசியதற்கு பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும் என்றார். அப்போது அவருடன் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியன் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x