Last Updated : 05 Apr, 2016 09:40 AM

 

Published : 05 Apr 2016 09:40 AM
Last Updated : 05 Apr 2016 09:40 AM

சரத்குமார் அழைத்தால் அவருக்கும் பிரச்சாரம் செய்வேன்: நடிகர் கருணாஸ் அறிவிப்பு

சரத்குமார் அழைத்தால் அவர் போட்டியிடும் தொகுதிக்கு சென்று பிரச்சாரம் செய்வேன் என்று நடிகர் சங்க துணைத் தலைவரும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளருமான நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

’தி இந்து’ வுக்காக அவர் அளித்த சிறப்பு பேட்டி:

அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறீர்களே?

இந்தத் தேர்தலில் 234 தொகுதி களிலும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி போட்டியிடுகிறது. எந்த ஒரு மாநிலத்திலும், யாரும் ஒரே சின்னத்தில் இத்தனை தொகுதிகளுக்கு போட்டியிட்டதாக தெரியவில்லை. இந்த தேர்தலில் அதிமுக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை அடையும். மக்கள் நலனுக்காக வாழ்ந்த எங்கள் முக்குலத்தோர் புலிப்படை அமைப் புக்கு முதல்வர் கொடுத்த அங்கீகாரம் இது. அதற்கான உழைப்பைக் கொடுத்து பாடுபடுவோம்.

அதிமுகவின் தேர்தல் வியூகம் தவறானது, கட்சி கோமா நிலையில் உள்ளது என்று எதிரணியினர் விமர்சனம் செய்கிறார்களே?

ஜெயலலிதாவின் திரைத்துறை பயணத்தை தவிர்த்து, ஆட்சி செய்த 15 ஆண்டுகால அரசியல் பயணம் மிகப்பெரியது. அவர் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மக்களுக்கு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு மக்களிடம் ஓட்டுக்கேட்டாலே போதும். மக்கள் அடைந்த பயன்கள் அவ்வளவு இருக்கின்றன. அதை சொல்வதற்குள்ளேயே தேர்தலும் வந்துவிடும். அப்படிப்பட்ட இயக்கம் அது. மற்ற வியூகங்கள் பற்றி எல்லாம் பேச ஒன்றுமே இல்லை.

உங்களுடைய முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சாதி ரீதியான இயக்கம் என்ற பேச்சு இருக்கிறதே? அது வாக்கு சேகரிப்பின் போது எப்படி வெளிப்படும்?

என் சமுதாயம் சார்ந்த இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடாது. கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் அவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே பணி செய்கிறோம். மற்ற சமுதாயத்தினரோடு கருத்துவேறுபாடு இல்லாமல் அவர்களை வழிநடத்திக் கொண்டுபோகிறோம். நானும் மற்ற எந்த சமூகத்தினரோடும் முரண்பாடு கொண்டவனாக இல்லை. தேர்தலில் போட்டியிடவிருக்கும் செய்தி கிடைத்ததும் நாசரிடம் வாழ்த்து பெறுவதற்காக பேசினேன். “உனக்கு சமுதாய ரீதியான அங்கீகாரம் இருந்தாலும், நீ ஒரு பொதுநலவாதி என்பது எனக்கும் தெரியும். உண்மையானவர்களுக்கு அது புரியும்” என்றார். நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதில் இருந்துதான் இங்கு எல்லாமே நடக்கிறது. மக்கள் யாரும் முட்டாள்கள் இல்லை. அவர்களை முட்டாள் என்று நினைப்பவன்தான் உலகத்தின் மிகப்பெரிய முட்டாள். நான் ஒரு இனத்தில் பிறந்திருக்கிறேன் என்பது என் அடையாளம். அந்த சமுதாய அடையாளத்தை சரியாக உணர்ந்து, மற்ற சமுதாயங்களுக்கு உதவக்கூடியவனாக வாழ்கிறேனா? என்பதுதான் இங்கே கேள்வி. குறுகிய மனப்பான்மை உள்ளவனாக இருந்திருந்தால் ஜெயலலிதா இவ்வளவு பெரிய கட்சியில் எனக்கு அங்கீகாரம் கொடுத்திருக்க மாட்டார்.

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியை எதிர்த்து போட்டியிட்டு துணைத் தலைவராக வெற்றியும் பெற்றுள்ளீர்கள். ஆனால், வரும் தேர்தலில் இருவருமே அதிமுக அணியில் போட்டியிடுகிறீர்களே?

சரத்குமார் அண்ணன் சீனியர். முன்னாள் நடிகர் சங்கப் பொதுப்பணிகளில் இறங்கி வேலை பார்த்தவர். ஒரு அரசியல் கட்சி நிறுவனர். உறுப்பினர்களை வழி நடத்தி செல்பவர். முன்பே அதிமுக அணியில் இடம்பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. எனக்கு சீட்டு கிடைத்ததை நினைத்து நிச்சயம் அவரும் மகிழ்வார். ‘எங்களுக்குள் எந்த இடைவெளியும் இல்லை’ என்பதை அவரே சொல்வார். அதேபோல, சரத்குமார் என்னை அழைத்து அவர் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டால், ஜெயலலிதா தலைமையிலான இந்த அணிக்கு நிச்சயம் பிரச்சாரம் செய்வேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x