

ஜிப்மரில் கடந்த பல மாதங்களாக மாத்திரைகள் தொடங்கி, கட்டு துணி கூட கையிருப்பில்லாத சூழல் நிலவுகிறது. ஆனால், அதே நேரத்தில் கடந்த இரு ஆண்டுகளில் ஜிப்மருக்காக வந்த பணத்தில் ரூ. 400 கோடி வரை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய அவலம் நடந்துள்ளதாக சிபிஎம் குற்றம் சாட்டி யுள்ளது. திறமையற்ற ஜிப்மர் இயக்குநரை பணியிடமாற்றம் செய்யவேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தமிழகம் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காக ஏழை மக்கள் நாள் தோறும்ஆயிரக்கணக்கில் வந்து செல்கின் றனர். சிறந்த மருத்துவமனையான ஜிப்மரின் தற்போதைய சூழல் சற்று நெருக்கடியாக இருக்கிறது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங் கம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஜிப்மர் மருத்துவமனை தற் போது நிர்வாக சீர்கேட்டினால் தரம் குறைந்து சீர்குலையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஜிப்மரில் கடந்த 6 மாத காலமாக உயிர் காக்கும் மருந்துகளில் சாதாரண வைட்டமின் சத்து மாத்திரைமுதல் ரத்த அழுத்தம், சர்க்கரைவியாதி, இதய நோய் போன்றவை களுக்குக் கூட உடனடியாக அளிக்கும் மாத்திரைகள் இருப்பு இல்லை என்று கை விரிக்கிறது. சாதாரண ஏழை எளிய மக்கள் படும் துயரம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.
பெண்கள் சிகிச்சைப் பிரிவில் குறிப்பாக மகப்பேறு சிகிச்சைப் பிரிவில், கட்டு கட்டும் துணிகள் வெளியில் வாங்கி வரச்சொல்லும் அவலம் நீடிக்கிறது. மேலும் பிரசவ காலங்களில் கையுறைகள் இருப்பு இல்லை என்று கூறி வெளியில் வாங்கி வரச்சொல்லி நோயாளிகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
மருத்துவப் பணியாளர்கள், செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக உதவியாளர்கள் பற்றாக்குறை நீடித்து வருகிறது.
மேலும் அப்பணிக்கு தினக்கூலி ஊழியர்களாக அவுட்சோர்சிங் முறையில் நியமனம் இருந்து வருகிறது. காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல்நீண்டகாலமாக இருந்து வருகிறது. அத்தியாவசிய பணிகளுக்கு அவுட்சோர்சிங் ஆபத்துக்களை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை எதிர்நோக்கி உள்ளது. பணியாளர்களுக்கு ஒப்பந்த உரிமையாளர்களும் சரிவர ஊதியம்அளிப்பது இல்லை என்பதும் வேதனை.
வெட்கக்கேடான விஷயம்
அனைத்து அடிப்படை வசதிக ளும் உள்ள ஜிப்மர் மருத்துவமனை நாளொன்றுக்கு 50 நபர்களுக்கு தான் சோதனை செய்வோம் என்று அறிவிப்பு இல்லாமலேயே நடைமுறைப்படுத்தி வருகிறது. நோய்த் தொற்று காரணம் காட்டி இதர மருத்துவப் பிரிவுகளை மூடுவது எந்த மத்திய அரசு மருத்துவமனையிலும் இல்லாத நடைமுறை. இதற்கு ஜிப்மர் நிர்வாகத்திற்கு யார் அனுமதி அளித்தது?. வெளி சிகிச்சைப் பிரிவு நாள் தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வருவதால் நோய்த் தொற்று விரைவாகப் பரவும் என்பதை காரணம் காட்டி மூடப்பட் டுள்ளது தவறானது.
அதே நேரத்தில் ஜிப்மர் நிர்வாகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை திருப்பி அனுப்பியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத் தட்ட ரூ. 400 கோடி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது வெட்கக்கேடானது.
ஜிப்மர் இயக்குநரின் தி றமையற்ற, கையாலாகத்தனத்தால் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாக சீர்கேடு அடைந்து வருகிறது. ஏழை எளிய மக்களின் மருத்துவமும் சீரழிந்து வருகிறது.
இவை அத்தனைக்கும் காரண மான இயக்குநரை உடனடியாக பணி மாற்றம் செய்ய வேண்டும். நிதி முறைகேடு, ஊழல் சம்பந்தமாக விசாரித்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தவறினால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
உலகத்தரம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனை சீர்கேடு அடைந்து வருவதை வேடிக்கை பார்க்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.