

மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெறும் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கத்தான் மறைமுகத் தேர்தலை திமுக அரசு அறிவித்துள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் அதிமுக ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த கே.பழனி சாமி, துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரைக்கு ரூ.5 ஆயிரம் கோடி திட்டங்களை கொண்டு வந்தனர். இந்தத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி அதிமுகவினர் மாநகராட்சி தேர்தலில் வாக்குச் சேகரிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து மதுரைக்கு ஸ்டாலின் ரூ.500 கோடி திட்டங்களை அறிவித்துள்ளார். இந்தத் திட்டங்களும் பெரும்பாலும் அதிமுக அரசு அறிவித்த திட்டங் கள்தான். மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெறும் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கத்தான் மறைமுகத் தேர்தலை திமுக அரசு அறிவித்துள்ளது என்று பேசினார்.
மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.ராஜா, மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் எஸ்.முகமது ரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.