

வேலூரில் கஞ்சா மற்றும் மது விற்பனையை தடுக்கக்கோரி பொது மக்கள் நேற்று அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் ஒல்டுடவுன் எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சீனிவாசன் (40). இவர், அதேபகுதியில் உள்ள தேநீர் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், சீனிவாசன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகாமையில் உள்ள பெட்டிக் கடைக்கு சென்றார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சீனிவாசன்(45) என்பவர் மது போதையில் அங்கு வந்தார். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் முருகன் மகன் சீனிவாசன், திடீரெனதான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேநீர் கடை தொழிலாளி சீனிவாசனை குத்தினார். இதில், பலத்த காயமடைந்த சீனிவாசன் உடனடியாக மீட்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். இந்த சம்பவம் வேலூரில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எஸ்.எஸ்.கே மானியம் தெருவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பொது மக்கள் தெற்கு காவல் நிலையம் அருகே அண்ணா சாலையில் அமர்ந்து நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து தடைபட்டது. அந்த நேரத்தில் கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவ்வழியாக கொண்டு வரப்பட்டது.
ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் மடக்கினர். ஆம்புலன்சிலிருந்து சீனிவாசன் உடலை கீழே இறக்கி சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் சீனிவாசனின் உடலை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதனால், பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறை உயர் அதிகாரிகள் அங்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர்.
காவல் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறும்போது, ‘‘எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியில் கஞ்சா மற்றும் மது விற்பனை அதிகமாக நடக்கிறது. காவல் துறையினர் ஒத்துழைப்போடு, கஞ்சா, கள்ளச்சாராயம், சூதாட்டம் உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. இதனை, காவல் துறையினர் கண்டு கொள்வதே இல்லை. கொசப் பேட்டை, எஸ்.எஸ்.கே.மானியம், ஓல்டுடவுன், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் கஞ்சா விற்பனையாகிறது.
சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுடன் காவல் துறையினர் கூட்டு வைத்துள்ளனர். இதை தட்டிக்கேட்கும் பொது மக்கள் மீது சமூக விரோத கும்பல் தாக்குதல் நடத்துகின்றனர். காவல் துறையில் புகார் அளித்தால், புகார் அளிப்பவர்கள் பெயர்களை காவல் துறையினரே சமூக விரோதிகளிடம் வழங்கி எங்களை மிரட்டுகின்றனர். இப்பகுதியில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து விட்டது.
இது போன்ற தொடர் சம்பவங்களால் அடிக்கடி அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொலை முயற்சி, வீடு புகுந்து தாக்குதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. பெண்கள், குழந்தைகள் மாலை 6 மணி கடந்துவிட்டால் தெருவில் நடமாடவே அஞ்சுகின்றனர்.
இதனைத் தட்டிக் கேட்டால் பாட்டில் மற்றும் கத்தியால் தாக்குகின்றனர். உயிர் பயத்தோடு வாழ முடியவில்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பெண்கள் முன் வைத்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். கஞ்சா விற்பனையை அடியோடு ஒழிக்க வேண்டும் என அப்பகுதி பெண்கள் கண்ணீர் மல்க கூறினர்.
அவர்களை சமரசம் செய்த காவல் துறை அதிகாரிகள், கஞ்சா, மது விற்பனையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், கஞ்சா வியாபாரிகளை கைது செய்யவும், சமூக விரோத குற்றச்செயல்கள் நடக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.