Published : 27 Jan 2022 03:21 PM
Last Updated : 27 Jan 2022 03:21 PM

பேச்சைக் குறைத்து செயலில் திறமையைக் காட்டவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: "என்னை பொறுத்தவரை பேச்சைக் குறைத்து நம்முடைய செயலில் திறமையைக் காட்டவேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்" என திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகிறபோது, “நம்முடைய முதல்வர் யாரிடத்திலும் அதிகம் பேச மாட்டார். கூட்டணியில் இருக்கும் தலைவர்களிடத்தில் கூட அதிகம் பேச மாட்டார்” என்றெல்லாம் சொன்னார். என்னை பொறுத்தவரை பேச்சைக் குறைத்து நம்முடைய செயலில் திறமையைக் காட்ட வேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். எனவே, அதற்கு நீங்கள் எல்லாம் எந்த அளவிற்குச் சிறப்பாக ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

இன்னும் நான் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்களை ஒப்பீட்டு சொல்லுகிற போது, அந்தந்த மாநிலத்தில் இருக்கும் முதல்வர்களுக்கு எல்லாம் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்ட நேரத்தில், அதில் தமிழகத்தைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் முதலிடம் என்ற செய்தி. அதில் எனக்கு ஒரு பெருமைதான், சிறப்புதான், அதை நான் மறுக்கவில்லை. முதல்வர் நம்பர் 1 என்று சொல்வதை விட, தமிழகத்துக்கு நம்பர் 1 இடம் என்று சொல்லும் நிலை வர வேண்டும். எனவே அந்த எண்ணத்தோடுதான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே அப்படிப்பட்ட ஆட்சியை நடத்தும் இந்தச் சூழ்நிலையில், நம்முடைய டி.கே.எஸ். இளங்கோவன், இந்தத் திருமண நிகழ்ச்சியைச் சிறப்போடு நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தத் திருமண நிகழ்ச்சியை நடத்துகிற நேரத்தில், தேர்தல் தேதி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அப்படி நடைபெறுகிற தேர்தலில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மகளிருக்கு வழங்கப்பட வேண்டிய நிலையில் அந்த தேர்தலை நடத்துகிறோம். அது தேர்தலில் மட்டுமல்ல, அது குடும்பத்திலும், இங்கு மணவிழா காணும் மணமக்களும் வாழ்க்கையில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு நிச்சயமாக இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அதில் இருக்க வேண்டுமென்று மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x