

சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும், அவர் அனுமதி வழங்கினால், மே மாதம் அல்லது மே மாத இறுதியில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "10,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளைத் தொடங்க அனுமதி கேட்டிருக்கிறோம். அதேநேரம் மற்ற மாநிலங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்துக்கும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறோம்.
நவம்பர் முதல் வாரத்தில்தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அப்போதிலிருந்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினோம். சுழற்சி முறையில் இல்லாமல், வழக்கமான முறையில்தான் வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. ஏற்கெனவே செப்டம்பர் முதல் வாரத்தில் ஒரு பிரிவு, நவம்பர் முதல் வாரத்தில் ஒரு பிரிவு என ஏற்கெனவே நாம் ஆரம்பித்துவிட்டோம். எங்களைப் பொறுத்தவரை, பாடத்திட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பதுதான் சவாலாக இருந்து வருகிறது. எனவே, வகுப்புகள் திறக்கப்பட்ட பின் வழக்கமான பாடங்கள் நடத்தப்படும். பிப்ரவரி முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்க முதல்வர் அனுமதி வழங்கினால், மே மாதம் அல்லது மே மாத இறுதியில் தேர்வுகள் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று கரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என முதல்வருக்கு பரிந்துரை அனுப்பியுள்ளதாவும், இதுகுறித்து கரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் நிபுணர்களுடன் ஆலோசித்து முதல்வர் முடிவை வெளியிடுவார் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று தெரிவித்திருந்தார்.
பொதுத் தேர்வுக்கு முன்னர் இரு திருப்புதல் தேர்வுகள் நடத்த முடிவு செய்திருந்தோம். தற்போது பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், பாடங்களை நடத்தி முடிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, ஒரு திருப்புதல் தேர்வு மட்டுமே நடத்தப்படும்.பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் எவ்வித மாற்றமும் இருக்காது. பழைய முறைப்படியே தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.