Published : 27 Jan 2022 09:46 AM
Last Updated : 27 Jan 2022 09:46 AM

தரமற்ற உணவு விற்பனை புகார்; 5 பயணவழி உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை: போக்குவரத்து துறை நடவடிக்கை

சென்னை: பயணிகளின் புகார் அடிப்படையில் மேலும் 5 தனியார் உணவகங்களில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதித்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெடுஞ்சாலைகளில் இருக்கும் சில தனியார் உணவகங்களில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பதாக பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

அதன்படி, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவின்பேரில், பொது மக்களின் புகார்களை ஒட்டி மாமண்டூர் பயணவழி உணவகத்தில் நடத்திய ஆய்வில் தரமற்ற உணவு வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குழு, நெடுஞ்சாலை தனியார் உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டது.

அதில் விக்ரவாண்டி அருகேசெயல்பட்டு வரும் அண்ணா,உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்கள் சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்றது ஆய்வின் போது கண்டறியப்பட்டது.

மேற்கண்ட உணவகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட உணவகங்களின் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்துவதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x