

சென்னை: ஈரோடு, காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம் உள்ளிட்ட 13 நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் ரூ.424.56 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணை: திருமங்கலம் நகராட்சியில் தனியார், பொதுத்துறை பங்களிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட 2019 மே மாதம் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோல, காஞ்சிபுரம், திருத்தணி, மயிலாடுதுறை, தருமபுரி, நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் திண்டிவனம் ஆகிய 7 நகர்ப்புற உள்ளாட் சிப் பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கான ஒப்புதல் கடந்த ஆண்டு ஜனவரியில் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் எழுதிய கடிதத்தில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அறிவிப்பில் சில நகர்ப்புற பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், ஒவ்வொரு பகுதியிலும் பேருந்து நிலையம் தொடர்பாக விரிவான மதிப்பீடு செய்து, போதிய நிலமும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, புதிய பேருந்து நிலையங்களுக்கான உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்த, நிதி ஒதுக்கீட்டுக்கான கருத்துரு பெறப்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை, சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தயாரித்துள்ளன. இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், அவை முன்வைக்கப்பட்டு, கொள்கை அளவில் 50 சதவீதம் தொகையை ஒதுக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட நகராட்சிகளால் மீதமுள்ள தொகையை அளிக்க முடியாத காரணத்தால், அந்த தொகையை டுபிட்கோ மூலம் பெற கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனடிப்படையில், ஈரோடு, கரூர், கடலூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய 13 நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கு ரூ.424.56 கோடிக்கு மதிப்பீடு செய்து, விரிவான திட்ட அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
எனவே, புதிய பேருந்து நிலையங்களுக்கான நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நகராட்சி நிர்வாக இயக்குநர் கோரியிருந்தார். அவரின் கோரிக்கையை கவனமாகப் பரிசீலித்து, பேருந்து நிலையத்துக்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.