

மதுரை: மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2019-ம் ஆண்டு ஜன.27-ம்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இன்றோடு அடிக்கல் நாட்டி 3 ஆண்டுகள் கடந்து விட்டன.ஆனால் தோப்பூரில் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் தவிர வேறு எந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கப்படவில்லை. பிரதமர் அடிக்கல் நாட்டும்போது ரூ.1,464 கோடி மதிப்பில் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி அமைக்கப்படும் என்று கூறினார். திட்டமிடப்பட்ட காலத்தில் கட்டுமானப் பணி தொடங்காத நிலையில், 2020-ம் ஆண்டு இறுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக உயர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான கடனுதவியை ஜப்பானின் ஜெ.ஐ.சி.ஏ. நிறுவனத்திடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது வரை நிதி உதவி வராததால் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் கூறியதாவது:
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கடனுதவி தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 9 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை. மதுரையோடு சேர்ந்து பஞ்சாப், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் எய்ம்ஸ் அறிவிப்பு வெளியானது. தற்போது பஞ்சாபில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான 88% கட்டுப்பானப் பணிகள் முடிவடைந்துவிட்டன. அசாமில் 52%, இமாசலப் பிரதேசத்தில் 68%, ஜம்மு மற்றும் காஷ்மீரில் 25% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனால் தமிழகத்தில் கட்டுமானத்துக்கான டெண்டர் விடும் நடவடிக்கை கூட மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் உள்ளது.
மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திலேயே நிர்வாக அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால்மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக அலுவலகம் புது டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் பாண்டியராஜா கூறும்போது, “மதுரை எய்ம்ஸ் தொடர்பான நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 2023-ம் ஆண்டில்தான் கட்டுமானப் பணிகளே தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய ஏமாற்றத்தை தருகிறது.
மேலும், கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என்றே தெரியாது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களைப்போல் தமிழகத்திலும் விரைவில் கட்டுமானப் பணியை தொடங்குவதுடன், மாணவர் சேர்க்கையையும் மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.