

புதிய வழித்தடங்களில் இயக்கப் படும் சிறிய பஸ்களுக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகில் உள்ள பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் 100 சிறிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சிறிய பஸ்ஸில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 அதற்கு மேல் ரூ.6, ரூ.8 ரூ.9 என்று வசூலிக்கப்படுகிறது. சிறிய பஸ்ஸில் 27 பேர் உட்கார்ந்து செல்லலாம். இது பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றதையடுத்து மேலும், 100 சிறிய பஸ்கள் இயக்கப்படும் என முதல்வர் கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தார்.
அதன்படி, கடந்த பிப்ரவரியில் 65 சிறிய பஸ்களும், மார்ச் 1-ம் தேதி 40 சிறிய பஸ்களும் தொடங்கி வைக்கப்பட்டன. கோடம்பாக்கம், அம்பத்தூர், மாங்காடு, திருவேற்காடு, வேளச் சேரி, கோயம்பேடு, பெரம்பூர், மேடவாக்கம், அஸ்தினாபுரம், ஆவடி, பூந்தமல்லி, பெருங் களத்தூர் உட்பட பல்வேறு இடங் களில் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பஸ் நிலையம், மின்சார ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் புதிய சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் இயக்கப்படும் சிறிய பஸ்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், ஆட்டோ, கால் டாக்ஸியை நம்பி இருந்த மக்கள் சிறிய பஸ்களில் பயணம் செய்கின்றனர். ஒவ்வொரு சிறிய பஸ் மூலமும் நாள்தோறும் தலா ரூ.3,500 வசூலாகிறது. இதற்கான பராமரிப்பு செலவும் குறைவு என்பதால், போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் வருவாய் பெற உதவியாக இருக்கிறது’’ என்றனர்.