Published : 18 Apr 2016 07:30 AM
Last Updated : 18 Apr 2016 07:30 AM

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எத்தனை பேர்?- விவரம் இல்லை என்கிறது தேர்தல் துறை

தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில், எந்தெந்த தொகுதியில் எத்தனை மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம்கூட தேர்தல் துறை அதிகாரிகளிடம் இல்லை என்று மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மதுரை சர்வமத வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவரான மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரத்து 75 வாக்காளர்களும், 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகளும் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. கடந்த 2014 லோக்சபா தேர்தலை விட இந்த முறை 41 லட்சத்து 62 ஆயிரத்து 393 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப் பட்டு, வாக்களிக்க உள்ளனர். ஆனால் இந்த வாக்காளர்களில் எவ்வளவு பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என்கிற விவரம் அதிகாரிகளிடம் இல்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே, மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சாய்தளப் பாதை, சக்கர நாற்காலி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாற்றுத்திறனாளி வாக்காளர்களையும் வாக்களிக்க வைப்பது ஜனநாயகக் கடமை. எனவே அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தடையின்றி செய்துதர வேண்டும் என கடந்த 2.4.14-ல் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் சாய்தளப் பாதை அமைக்கப்பட வில்லை. இதையடுத்து நான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தேன். அப்போது இனிவரும் நாட்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தது.

வரும் மே 16-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், “உங்கள் தொகுதியில் எவ்வளவு மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என்பதை நீங்களே கணக்கெடுத்துச் சொல்லுங்கள்” என தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள், சங்கங் களிடம் கூறி வருகின்றனர். இது பழியை எங்கள் மீதே போட்டு நீதிமன்ற உத்தரவை தட்டிக் கழிப்பதற்கு சமம்.

ஒரு தொகுதியில் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருந்தால் அவர்களுக்கென தனி வாக்குச்சாவடி அமைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஏற்கெனவே கூறியுள்ளார். எனவே தேர்தலுக்குள் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நிரந்தர சாய்தளப் பாதை, போதுமான சக்கர நாற்காலி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துதர வேண்டும். 2014 தேர்தலைப் போல இந்த தேர்தலிலும் அதிகாரிகள் மெத் தனப்போக்குடன் செயல்பட்டால், மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x