

தாம்பரம்: தாம்பரம் அருகே முடிச்சூர் கிராமத்தில் குடியரசு தின விழாவின்போது, கரோனா தடுப்பு முன் களப் பணியாளரை தேசியக் கொடியை ஏற்றச் செய்து கிராம மக்கள் கவுரவப்படுத்தினர்.
நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் வெவ்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றினர்.
இந்நிலையில் தாம்பரம் அருகே முடிச்சூர் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் முருகம்மாளை (48) கவுரவிக்கும் வகையில் முடிச்சூரில் நடந்த குடியரசு தின விழாவில், கரோனா காலத்திலும் தங்கள் பணியை சிறப்பாக செய்த அனைத்து தூய்மை பணியாளர்கள் சார்பில் நாட்டின் தேசியக்கொடியை ஏற்றச் செய்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. தூய்மை பணியாளர், தேசிய கொடியேற்றியது, மக்கள் இடையே வரவேற்பை பெற்றது. ஒட்டு மொத்த தூய்மைப் பணியாளர்களுக்கும் கவுரவத்தை அளிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த முடிச்சூர் ஊராட்சி முன்னாள் தலைவர் தாமோதரன் கூறியதாவது:
தூய்மைப் பணியாளர்களின் சேவை போற்றப்பட வேண்டிய ஒன்று. அவர்களால்தான் நாடும் வீடும் தூய்மையாக இருக்கிறது. கரோனா காலத்தில் அவர்களது பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
எனவே தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்த வேண்டும் என நினைத்தோம். அந்த வகையில் முருகம்மாளை வைத்து தேசிய கொடி ஏற்றப்பட்டது. விளிம்புநிலை மனிதர்கள் பாராட்டப்படும்போதும், அவர்களுக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்கும்போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றார்.