Published : 27 Jan 2022 09:27 AM
Last Updated : 27 Jan 2022 09:27 AM

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும்: வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தகவல்

வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கட்டப்பட்ட சுரங்கப்பாதையை பொதுமக்களின் பயன் பாட்டுக்காக நேற்று திறந்து வைத்து பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர்.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங் களில் விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும் என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தெரிவித்தார்.

வேலூர் சத்துவாச்சாரியில் கெங்கையம்மன் கோயில் எதிரே வட்டார போக்குவரத்து அலுவலக சாலைக்கு செல்லும் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் போது அடிக்கடி விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதை தவிர்க்க சத்துவாச்சாரி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் எதிரே ரூ.1.80 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி சுரங்கப்பாதை அமைப்பதற்கான பூமி பூஜை போடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்று வந்த பணிகள் தற்போது முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, சுரங்கப்பாதை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுரங்கப்பாதையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்கள் பல்வேறு கால கட்டங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் பூமி பூஜையை நடத்தினார். ஆனால் பணிகளை தொடங்கவில்லை.

இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இந்த பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கப்படும் என நான் வாக்குறுதி அளித்தேன். அதன்படி சுரங்கப்பாதை பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது முடிக்கப்பட்டு இன்று (நேற்று) பொதுமக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட் டுள்ளது.

மத்திய அரசிடமிருந்து மக்களுக்காக திட்டங்களை பெறுவதில் திமுக எப்போதும் முனைப்புடன் செயல்படும். சத்துவாச்சாரியை தொடர்ந்து குடியாத்தம் புறவழிச்சாலை அமைக்க ரூ. 221 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். அதேபோல, கந்தநேரி,வெட்டுவானம் பகுதிகளில் விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ராஜீவ் காந்தி சிலை அருகே புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க அங்கு மண் பரிசோதனை நடைபெற்றுள்ளது. விரைவில் அங்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும்.

வேலூர் விமான நிலையத்துக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. ஓடுதளம் அமைக்க கூடுதலாக இடம் தேவைப்படுகிறது. அதற்கான நில அபகரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது.

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கிரீன்சர்க்கிளில் அகலம் குறைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் விரைவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும்.

மேலும், வேலூர் சிஎம்சி மருத்துவமனை அருகே மேம்பாலம் அமைக்கவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன்.

காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் சாலைகள் மோசமடைந்துள்ளன. விரைவில் மாற்று வழி ஏற்பாடு செய்து அந்த பாலம் சீரமைக்கப்படும்‌. அங்கு கூடுதலாக ஒரு ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலூரில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்புகள் உள்ளதோ, அவை அகற்ற நட வடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா விரைவில் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் அதற்கான பணிகள் நடைபெறும். வேலூர் நாடாளுமன்ற தொகுதியை நாட்டிலேயே சிறந்த தொகுதியாக மாற்றி காட்டுவேன்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

8 கண்காணிப்பு கேமராக்கள்

சத்துவாச்சாரியில் திறக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை 5.8 மீட்டர் அகலமும், 25 மீட்டர் நீளமும் கொண்டது. சுரங்கப் பாதை முழுவதும் டைல்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. நவீன மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் அசம்பாவிதங்களைத் தடுக்க 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 24 மணி நேரமும் சுரங்கப் பாதையை காவல் துறையினர் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காத வகையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் சுரங்கப்பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எச்சில் துப்பக் கூடாது. சுரங்கப் பாதையில் நடந்து செல்லும்போது புகைபிடிக்கக் கூடாது. சுரங்கப்பாதையின் உள்ளே விளம்பர துண்டுப் பிரசுரங்கள் ஒட்டுவது, எழுதுவது போன்ற அநாகரீகமான செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சுரங்கப்பாதையை தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிப்பார்கள். வருங்காலத்தில் மாநகராட்சி மூலம் பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x