Published : 26 Jan 2022 06:50 PM
Last Updated : 26 Jan 2022 06:50 PM

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்.19-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. பிப்.22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் புதன்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 12,838 வார்டு உறுப் பினர் பதவிகளுக்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பதவிகளுக்கான தேர்தல்கள் அனைத்தும் கட்சி அடிப்படையில் நடக்கும்.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 28-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். பிப்.4-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். மனுக்கள் மீதான பரிசீலனை பிப்.5-ம் தேதி நடக்கும். மனுக்களை திரும்பப் பெற பிப்.7 கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும், வெப்ப மானி, கிருமிநாசினி திரவம், முகக் கவசம் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் அனுப்பப்பட உள்ளன.

வேட்பாளர்கள் வீடு வீடாக பிரச்சாரம் செய்ய அதிகபட்சமாக 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கூட்டமாக பிரச்சாரம் செய்யவும், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. உள்ளரங்க கூட்டங்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

தேர்தல் நடக்கும் மாநகராட்சிகளில் 15,158, நகராட்சிகளில் 7,417, பேரூராட்சிகளில் 8,454 என மொத்தம் 31,029 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதிகபட்சமாக சென்னை மாநகராட்சியில் 5,794 வாக்குச் சாவடிகள் உள்ளன.

இந்த தேர்தலில் 1 கோடியே 37 லட்சத்து 6,793 ஆண்கள், 1 கோடியே 43 லட்சத்து 45,637 பெண்கள், 4,324 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 கோடியே 79 லட்சத்து 56,754 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சென்னை மாநகராட்சி யில் மட்டும் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்புப் பணியில் 80 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரம் அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அனைத்து இடங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதற்காக 55,337 கட்டுப்பாட்டு கருவிகளும், 1 லட்சத்து 6 ஆயிரத்து 121 வாக்குப்பதிவு இயந்திரங்களும் முதல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட உள்ளார். சென்னை மாநகராட்சிக்கு மட்டும் 3 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இணை இயக்குநர், உதவி இயக்குநர், துணை ஆட்சியர் நிலையில் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தலா ஒருவர் வீதமும், மாநகராட்சிகளில் மண்டலத்துக்கு ஒரு அதிகாரி வீதம் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வைப்புத் தொகையாக பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.500, நகராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.1,000, மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற வேட்பாளர்களுக்கு வைப்புத்தொகையாக பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.1,000, நகராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.2 ஆயிரம், மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.4 ஆயிரம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா, நுண் பார்வையாளர்கள், இணையதளம் வழி கண்காணிப்பு ஆகிய வழிகளில் கண்காணிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை பிப்.22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் நடவடிக்கைகள் 24-ம் தேதி முடிவடைகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சி மார்ச் 2-ம் தேதி நடக்கும். மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தலுக்கான கூட்டம் மார்ச் 4-ம் தேதி நடக்க உள்ளது. அன்று மொத்தம் 1,298 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்துள்ளன. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் அரசுப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகளை இணைந்து மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணி களுக்காக அரசு வாகனங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்துக்குமேல் ரொக்கமாக கொண்டு செல்வோர் உரிய ஆவ ணங்களுடன் கொண்டு செல்ல அறி வுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஆணைய செயலர் எ.சுந்தரவல்லி உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x