Published : 26 Jan 2022 05:30 PM
Last Updated : 26 Jan 2022 05:30 PM

ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டக் கோரிக்கை: கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி போராட்டம்

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கீழக்கோட்டையில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கீழக்கோட்டை ஊராட்சியில் கோவிந்தபுரம், கோபாலபுரம், கே.கைலாசபுரம், கீழக்கோட்டை ஆகிய 4 கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் மற்றும் கூலித்தொழிலாளி பிரதானமாக உள்ளது. ஊராட்சி மன்ற தலைவராக கீழக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார், துணை தலைவராக துரைராஜ் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

கீழக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் கே.கைலாசபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் தற்போது பழுதாகிவிட்டதால், அங்குள்ள சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஊராட்சியின் தாய் கிராமமான கீழக்கோட்டையில் தான் அமைக்க வேண்டும் என கீழக்கோட்டையை சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை 11.45 மணிக்கு ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், துணை தலைவர் துரைராஜ், ஊர் நாட்டாண்மை தங்கையா ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் பேருந்து நிறுத்தம் அருகே கே.கைலாசபுரம் செல்லும் சாலையில் கருப்பு கொடிகளை கட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் தாய் கிராமமான கீழக்கோட்டையில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

தகவல் அறிந்து, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாண்டியராஜன், டிஎஸ்பி சங்கர் மற்றும் அதிகாரிகள் கீழக்கோட்டைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கீழக்கோட்டையில் பழமையான ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ளது. ஆனால், தொடர்ச்சியாக கே.கைலாசபுரத்தை சேர்ந்தவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அந்த ஊரைச் சேர்ந்தவர் தானமாக வழங்கிய நிலத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்துவிட்டது. அதனால், புதிய கட்டிடத்தை ஊராட்சி தாய் கிராமமான
கீழக்கோட்டையில் தான் கட்ட வேண்டும் என கிராம மக்கள் கூறினர்.

கீழக்கோட்டையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தின் ஆவணங்கள், கே.கைலாசபுரத்தில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தின் ஆவணங்கள் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடவும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 11.45 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 3.30 மணி வரை நீடித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x