

சென்னை: தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும்இரவு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பைத் தொடர்ந்து ஜன.6 முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தஊரடங்கு ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டது. இதுதவிர, ஜன.9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலானது. அதைத் தொடர்ந்து, ஜன.16, 23 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
31 ஆயிரத்தை தொட்டது
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை நெருங்கி வந்தது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், கடந்தசில தினங்களாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதேநேரம், தொற்றால் இறப்ப வர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தொற்று பரவல் குறைந்தால் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படலாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், வரும் ஜன.30(ஞாயிறு) முழு ஊரடங்கை அமல்படுத்துவது, ஜன.31-ம் தேதிக்கு பிறகு இரவு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜன.27) காலை ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
இதில் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்துக்குப் பின் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.