

மதுரை கிழக்கு தொகுதியில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மதுரை கிழக்கு தொகுதி 1957-ம் ஆண்டு முதல் 13 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 2 முறை காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும். திமுக 2 முறையும், அதிமுக 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யாவை தேர்ந்தெடுத்த தொகுதி மதுரை கிழக்கு தொகுதி.
2006 தேர்தலில் என்.நன்மாறன் (மார்க்சிஸ்ட் கம்யூ.) வெற்றி பெற்றார். 2011 தேர்தலில் கே.தமிழரசன் (அதிமுக) வெற்றி பெற்றார்.
இந்தமுறை இத்தொகுதியில் அதிமுக சார்பில் தக்கார் பாண்டி, திமுக சார்பில் மூர்த்தி, மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் காளிதாஸ், பாமக சார்பில் அழகுராஜா, பாஜக சார்பில் சுசீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கிழக்குத் தொகுதி புறநகர் பகுதியில் அமைந்திருந்தாலும் நகரின் விரிவாக்க பகுதிகள், கிராமங்களும் இத்தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து மாநகரப் பகுதிகள் இந்த தொகுதியில்தான் அதிகளவு விரிவடைந்து வருகிறது. இந்த தொகுதியில் நீர் ஆதாரமில்லாமல் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக்கப்படுகின்றன. இளைஞர்கள், வேலைவாய்ப்பில்லாமல் இடம்பெயர்ந்து செல்கின்றனர்.
சமயநல்லூர் தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்டு, அதன் பல பகுதிகள் கிழக்கு தொகுதியில் சேர்க்கப்பட்டன. நாராயணபுரம், அய்யர்பங்களா, ஆனையூர், திருப்பாலை, ஆத்திக்குளம், உத்தங்குடி, வண்டியூர், மதுரை மேற்கு மற்றும் கிழக்கு ஒன்றியங்களின் சில பகுதிகள் இந்த தொகுதியில் உள்ளன. கூலித் தொழிலாளர்கள், நெசவாளர்கள் இத்தொகுதியில் அதிகம் வசித்து வருகின்றனர்.
ஒத்தக்கடை சில்வர் பட்டறை தொழில், வண்டியூர் நெசவாளர் பிரச்சினை, தறி மின் பற்றாக்குறை, விரிவாக்க பகுதிகளில் பாதாள சாக்கடை, சாலை வசதியின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகள், உத்தங்குடி-சமயநல்லூர் இணைப்புச்சாலை உள்ளிட்டவை நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், திமுக வேட்பாளர் பி. மூர்த்தி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டார். அதிமுக வேட்பாளர் தக்கார் பாண்டி, மதுரைக்கு வரும் முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை நம்பியுள்ளார். மற்ற வேட்பாளர்கள் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.